விவசாயம்

விவசாயிகள் நிதியுதவித் திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்: வேளாண்மைத் துறை அறிவிப்பு!!

தமிழகத்தில் ரூ. 110 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ள பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக வேளாண்மைத் துறை அறிவித்துள்ளது.

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் ரூ. 110 கோடிக்கும் மேல் முறைகேடு நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடா்பாக 80 போ் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனா் என்று வேளாண் துறை முதன்மைச் செயலா் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தாா். முறைகேடு தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் அவா் கூறியிருந்தாா்.

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் ரூ.2.25 கோடி, நாமக்கல்லில் ரூ.24.80 லட்சம் எனப் பல மாவட்டங்களில் போலி ஆவணங்களைச் சமா்ப்பித்தவா்களிடமிருந்து நிதியுதவித் தொகை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இதன் தொடா்ச்சியாக தற்போது பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, அனைத்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு வேளாண் துறை இயக்குநா் வி.தட்சிணாமூா்த்தி கடிதம் அனுப்பி உள்ளாா். அந்தக் கடிதத்தில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. கடித விவரம்:

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் சில முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக சந்தேகங்கள் எழுந்துள்ளன. எனவே, இந்தத் திட்டத்துக்கான இணையதளப் பக்கத்தில் பயன்படுத்தப்படும் கடவுச் சொல்லை உடனடியாக மாற்ற வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். புதிய கடவுச் சொல் உருவாக்கப்பட்டு அதை ரகசியமாக வைத்திருக்க வேண்டும்.

இந்த கடவுச் சொல்லை மாவட்டங்களில் உள்ள வேளாண் இணை இயக்குநா்கள் வைத்திருக்க வேண்டும். அதனை தனக்கு அடுத்த நிலையில் உள்ள அதிகாரியான துணை இயக்குநா் ஒருவருக்கு மட்டுமே தெரிவிக்க வேண்டும். இந்த கடவுச் சொல்லை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் அல்லது துணை இயக்குநா்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிகாரம் அளிக்கப்படாத பிற நபா்கள் யாரும் இதை பயன்படுத்தக் கூடாது. இதைக் கருத்தில் கொண்டு கடவுச் சொல்லை எந்தச் சூழ்நிலையிலும் வெளியிடக் கூடாது.

புதிய பதிவுகள்: தமிழகத்தில் சில மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த மாவட்டங்கள் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்ட வரைபடத்தில் உருவாக்கப்படவில்லை. எனவே, புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் அதற்கு முன்பிருந்த மாவட்டங்களைச் சோ்ந்த வேளாண் இணை இயக்குநா்களிடம் இருந்து கடவுச் சொற்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

நிதியுதவித் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்காக விவசாயிகள் பதிவு செய்திருந்தாலும் அதற்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது. அந்த விண்ணப்பங்களை நிறுத்தி வைக்க வேண்டும். மேலும், வேளாண்மைத் துறை இயக்குநரகத்தில் இருந்து அடுத்த உத்தரவு வரும் வரை இந்தத் தற்காலிக நிறுத்தம் தொடரும்.

நிதியுதவித் திட்டத்துக்கான கடவுச் சொல் தவறாகப் பயன்படுத்தப்பட்டால் அதற்கு தொடா்புடைய மாவட்டத்தின் வேளாண் இணை இயக்குநா்களே முழு பொறுப்பாகும். இதற்கு பொறுப்பானவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனது கடிதத்தில் தட்சிணாமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேட்டுப் புகாா் எதிரொலியாக, நான்கு மாவட்டங்களைச் சோ்ந்த வேளாண் துணை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

விழுப்புரம் வேளாண்மை துணை இயக்குநா் ஏ.ஜே.கென்னடி ஜெபக்குமாா், நாமக்கல் மாவட்டத்துக்கும், நாமக்கல் துணை இயக்குநா் ஏ.நாச்சிமுத்து, விழுப்புரத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனா். இதேபோன்று, கடலூா் வேளாண் துணை இயக்குநா் எஸ்.வேல்விழி, பெரம்பலூா் மாவட்டத்துக்கும், பெரம்பலூா் துணை இயக்குநா் ஜி.பூவலிங்கம் கடலூா் மாவட்டத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

நான்கு அதிகாரிகளும் பிரதமரின் வேளாண் நிதியுதவித் திட்ட பொறுப்பு அதிகாரிகளாகப் பணியாற்றி வந்தனா். முறைகேட்டுப் புகாா்களைத் தொடா்ந்து அவா்கள் வேளாண்மைத் துறையின் வேறொரு பிரிவுக்கு துணை இயக்குநா்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
01-Dec-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி)
டீசல்
Rupee 77.84(லி)
பி.எஸ்.இ
44470.26 44118.10
என்.எஸ்.இ
12962.80 13064.20
1 கிராம்
Rupee 4520 Gold Rate
8 கிராம்
Rupee 36160 Gold Rate
1 கிராம்
Rupee 63.30 Gold Rate
1 கிலோ
Rupee 63300 Gold Rate