Just In

குண்டு ராவ்....! நாகேஷாக மாறிய வெற்றிக்கதை...!

தமிழ் சினிமாவில் டைமிங் காமெடியை அறிமுகம் செய்து வைத்து, தன் தனித்துவமிக்க உடல்மொழியால் ரசிகப்பெருமக்களின் உள்ளங்களை கொள்ளையடித்த நவரச நாயகன்...,..நாகேஷ் அவர்களின் பிறந்ததினம் இன்று. அடைமொழி கூடிய சினிமா உலகில் எந்த அடைமொழியும் இல்லாமல் ஆட்டிப்படைத்த நகைச்சுவை அசுரனை இந்நாளில் நினைவுக் கூறுவோம்.

சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பின்புலம் இல்லாத ஏழைக்குடும்பத்தில் பிறந்து தன் வாழ்நாளில் சொல்லிக்கொள்ளும் படியான எண்ணற்ற சாதனைகளை புரிந்த நாகேஷின் இளம்பருவம் சோகங்களால் சூழப்பட்டிருந்தது. பொருளாதார பின்புலம் இல்லாவிட்டாலும் படித்து  சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் மட்டும் நாகேஷிற்கு உறுதியாக இருந்தது, ஆனால் வறுமையின் பிடி நாகேஷை அவர் போக்கில் பயணிக்க விடவில்லை. குடும்ப வறுமை காரணமாக சிறு வயது முதலே குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்த கிடைத்த வேலைகளை சலிக்காமல் செய்து வந்தார். நாடகத்தின் மீது அதீத ஈர்ப்பு கொண்டிருந்த நாகேஷ் படித்து முடித்த கையோடு தன் கலைத்துறை கனவுகளை விரட்டி பிடிக்க சென்னைக்கு கிளம்பினார்.

நாடகத்தில் நடித்து பிரபலமானால் மட்டுமே சினிமா வாய்ப்பு கிடைக்கும் என்பதில் உறுதியாக இருந்த நாகேஷ் சென்னையில் நாடக நடிகராக வாய்ப்புத் தேடி ஏறி இறங்கிய நாடக கம்பெனிகள் ஏராளம். சென்னையில் பல நாட்கள் அலைந்து திரிந்து ஒரு வழியாக ஒரு நாடக கம்பெனியில் சேர்ந்த நாகேஷிற்கு முதலில் சிறிய கதாபாத்திரங்களே வழங்கப்பட்து. கிடைக்கும் நகைச்சுவை கதாப்பாத்திரங்களை லாவகமாக கையாண்டு சபையில் குழுமியிருப்போரை வயிறு வலிக்க சிரிக்க செய்வது  தான் அவரின் தனி சிறப்பு.

                                         

நடிகர் நாகேஷின் இயற்பெயர் குண்டு ராவ் உடலமைப்புக்கும் அவரின் பெயருக்கும் சம்மந்தமே இருக்காது. மிகவும் ஒல்லியான உடல்வாகை கொண்ட நாகேஷை குண்டுராவ் என்றழைப்பதற்கு யாருக்கு தான் மனம் வரும். நாடக நடிகர் குண்டு ராவை நாகேஷாய் தமிழகத்திற்கு அடையாளம் காட்டிய பெருமை எம்ஜிஆர் ஒருவரையே  சேரும். ஒருமுறை குண்டுராவ் ஒரு நாடகத்தில் 'நாகேஸ்வரன்' எனும் பாத்திரத்தில் நடித்தார், அந்த நாடகத்திற்கு எம்.ஜி.ஆர் தலைமை தாங்க அன்று திறந்தது நாகேஷிற்கு சினிமா கதவு.... 

அந்த நாடகத்தில் வயிற்றுவலி நோயாளி வேடத்தில் பின்னி எடுத்த  நாகேஷின் நடிப்பு திறனை பார்த்துவியந்து போன எம்ஜிஆர், அவரை மேடைக்கே அழைத்து ஒரு கோப்பை வழங்கினார்.

ஒட்டக நடையில் நடனம், உடல்மொழியில் தனித்துவம், கச்சிதமான முகபாவனை என நடிப்பில் நவரசங்களை வெளிக்காட்டிய நாகேஷ் பின்னாளில் இந்தியாவின் 'ஜெர்ரி லூயிஸ்' என்றே அழைக்கப்பெற்றார்.

கவிஞர் வாலியும், நாகேஷும் மிக நெருங்கிய நண்பர்கள், கலைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் சென்னை வந்தடைந்த இருவரும் ஒரே அறையில் தான் தங்கினார்கள்...மாசக்  கடைசியில் செலவுக்கு காசில்லாமல் ஒருவரிடம் இருந்து ஒருவர் கைமாத்து வாங்கி தான் வாழ்க்கையை நகர்த்தி வந்தார்கள். தமிழ் சினிமாவில்  வெவ்வேறு கோணங்களில் முயற்சித்த இருவருக்கும் ஒரே நேரத்தில் வாய்ப்புகள் வர தொடங்கின. அதுவரை  நாடக நடிகராக இருந்த நாகேஷ் கே. பாலச்சந்தரால் முதன் முதலில் 'தாமரைக்குளம்' படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார்.

                  
                                  
                         
புதுமுகமாக இருந்தாலும் நடிப்பில் சீனியர் நடிகர்களை வாரி சாப்பிட்ட நாகேஷ் மெதுமெதுவாக தனக்கான இடத்தை கட்டமைக்க தொடங்கினார். சர்வர் சுந்தரம், காதலிக்க நேரமில்லை, சினிமா செல்லப்பா, திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள் என அடுத்தடுத்து நடித்த படங்கள் இவரை புகழின் உச்சத்துக்கு கொண்டு சென்றது. அதுவரை நகைச்சுவையில் கலக்கி வந்த நாகேஷை நாயகனாக்கி அழகு பார்த்த பெருமை அவர் நண்பர் இயக்குனர் கே.பாலச்சந்தரையே சேரும். அவர் இயக்கத்தில் நாகேஷ் நடித்து வெளியான 'நீர்க்குமிழி' திரைப்படத்தை பார்த்து பாராட்டாத ஆளே இருக்கமாட்டார்கள், அந்த அளவுக்கு நடிப்பில் அசத்தியிருப்பார் நாகேஷ்.

அதைத்  தொடர்ந்து பாலசந்தர் தன் படங்களில், வித விதமான பாத்திரங்களைக் கொடுத்தார் நாகேஷுக்கு. அது சின்ன கேரக்டரோ... பெரிய கேரக்டரோ...  அசத்தலான நடிப்பில் அசரடித்தித்தார் 

எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி தொடங்கி ரஜினி, பாக்ய்ராஜ் வரை அனைவருக்கும் நண்பராக திரையை பகிர்ந்துக் கொண்டார்.

அந்தக் காலத்தில், ஏவிஎம் படமாக இருந்தாலும் சரி, தேவர் பிலிம்ஸ் கம்பெனியாக இருந்தாலும் சரி  முதலில் நாகேஷ் கால்ஷீட்டை வாங்கிவிட்ட பிறகுதான் நடிகர்களுக்கே  கதை சொல்லுவார்கள். அந்த அளவுக்கு டிமாண்டான நடிகராக இருந்தார் நாகேஷ்.  நகைச்சுவை நடிகராக, குணச்சித்திர நடிகராக நடித்தவர் வில்லனாகவும் மிரட்டினார். 

                   

சிறிது காலம் நடிப்புக்கு ஓய்வளித்து ஒதுங்கியிருந்தவர்  மீண்டும்  ‘இந்திரன் சந்திரன்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘நம்மவர்’, ‘அவ்வை சண்முகி’, ‘பஞ்ச தந்திரம்’ என அடுத்தடுத்து சிக்ஸர்களாக அடித்தார்.

எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தன் முத்திரையைப் பதித்த மகா  நகைசுவை கலைஞன் நாகேஷ் 2009-ஆம் ஆண்டு வயது மூப்பு காரணமாக உயிர்நீத்தார். கிட்டதட்ட 4 தலைமுறை நடிகர்களோடு நெடிய பயணம் செய்தவர்  ஆயிரக்கணக்கான படங்களில் நடித்திருக்கிறார். 

அடைமொழி கூடிய சினிமா உலகில்  எந்த அடைமொழியும் இல்லாமல் ஆட்டிப்படைத்த நகைச்சுவை  அசுரனை 'நகைச்சுவையின் மறுபெயர்' என்றழைக்கிறது சினிமா டிக்‌ஷனரி.

சினிமா டிக்‌ஷனரியின் வரலாற்று பக்கங்களை தன் தரமான காமெடியால் நிரப்பிய டைமிங் மன்னன், நவரச நாயகன் நாகேஷை இந்நாளில் நினைவுக்கூருவோம்.

              


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
24-Oct-2020
பெட்ரோல்
Rupee 84.14(லி)
டீசல்
Rupee 75.95(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee 4710 Gold Rate
8 கிராம்
Rupee 37680 Gold Rate
1 கிராம்
Rupee 62.60 Gold Rate
1 கிலோ
Rupee 62600 Gold Rate