உலகம்

உக்ரைனில் கோர விபத்தில் சிக்கிய ராணுவ விமானம்: தரையில் விழுந்து தீப்பிடித்ததில் 25 பேர் உடல் கருகி பலி....

ரஷ்யா- உக்ரைன் இடையே உரசல்கள் அதிகரித்துள்ள நிலையில், பயிற்சியில் ஈடுபட்ட“அன்டோனோவ் அன் 26” ரக ராணுவ விமானம் இயந்திர கோளாறால் விபத்தில் சிக்கியதில் ராணுவ வீரர்கள் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

கீவ்:-

உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள கார்கிவ் பிராந்தியத்தில் கார்கிவ் விமானப்படை பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு விமானப்படை வீரர்களுக்கு விமானத்தை இயக்குவது உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில் நேற்று முன்தினம் விமானப்படை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக உக்ரைன் ராணுவத்துக்கு சொந்தமான “அன்டோனோவ் அன் 26” ரக விமானம் சுஹூவ் நகரில் உள்ள ராணுவ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது.
விமானத்தில் விமானப்படை வீரர்கள் 20 பேரும், விமானி உட்பட விமான ஊழியர்கள் 7 பேரும் பயணம் செய்தனர். புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் விமானத்தின் 2 என்ஜின்களில் ஒன்று திடீரென செயலிழந்தது. இதனை அறிந்த விமானி உடனடியாக விமானத்தை அவசரமாக தரை இறக்க முடிவு செய்தார்.

அதன்படி ராணுவ விமான நிலையத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலுள்ள நெடுஞ்சாலையில் விமானத்தை தரையிறக்க அவர் முயற்சித்தார். ஆனால் அதற்குள் அவரது கட்டுப்பாட்டை இழந்த விமானம் சாலையோரம் உள்ள புதரில் விழுந்தது. தரையில் மோதிய வேகத்தில் விமானத்தில் தீப்பிடித்தது.

மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது கண்ணிமைக்கும் நேரத்தில் ஒட்டுமொத்த விமானத்தையும் உருக்குலைய செய்தது. எனினும் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அளித்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விமானத்தில் எரிந்த தீயை அணைத்தனர். இந்த கோர விபத்தில் 25 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அதேசமயம் விமானப்படை வீரர்கள் 2 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.

அவர்கள் இருவரும் விமானம் தரையில் விழுவதற்கு சில வினாடிகளுக்கு முன் விமானத்தில் இருந்து குதித்து உயிர் தப்பியதாக கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்துவதற்காக தனி குழு ஒன்றை அமைத்து உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் விபத்து நடந்த கார்கிவ் பிராந்தியத்துக்கு  சென்று ஆய்வு நடத்துகிறார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
20-Oct-2020
பெட்ரோல்
Rupee 84.14(லி)
டீசல்
Rupee 75.95(லி)
பி.எஸ்.இ
40519.48 40211.22
என்.எஸ்.இ
11820.40 11898.25
1 கிராம்
Rupee 4709 Gold Rate
8 கிராம்
Rupee 37672 Gold Rate
1 கிராம்
Rupee 62.75 Gold Rate
1 கிலோ
Rupee 62750 Gold Rate