தமிழ்நாடு

திருச்சி நகைக்கடையில் கொள்ளையடித்து கைதான கொள்ளையன் முருகன் உயிரிழப்பு!!

திருச்சியில் அமைந்துள்ள லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் துளையிட்டு பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்த பிரபல கொள்ளையன் முருகன் போலீசாரால் கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 6 மாத காலமாக உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த கொள்ளையன் முருகன் இன்று காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே லலிதா ஜூவல்லரி நகைக்கடை உள்ளது. இந்த கடையில் கடந்த வருடம் அதிகாலையில்  2 கொள்ளையர்கள் உள்ளே புகுந்து ரூ.12 கோடியே 41 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளையை நடத்தியது பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன் தலைமையிலான கும்பல் என்ற தகவல் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

 திருவாரூரை சேர்ந்தவர் முருகன் (வயது 44). கவனத்தை திசை திருப்பி கொள்ளையடிப்பதில் பலே கில்லாடி. இவர், தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களிலும் கைவரிசை காட்டி உள்ளார். முருகன் மீது ஏராளமான கொள்ளை வழக்குகள் உள்ளன. கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றுவதில் ஒவ்வொரு கொள்ளை கும்பலும் தனித்தனி முறைகளை கையாளுவார்கள். ஆனால் முருகன் தலைமையிலான கொள்ளை கும்பல் ஒருமுறை திட்டமிட்டு களத்தில் இறங்கி விட்டால் வெற்றிகரமாக கொள்ளையடித்து விட்டு தான் திரும்புவார்கள்.

கடந்த 2008-ஆம் ஆண்டு முருகன் தனக்கென கொள்ளை கும்பலை உருவாக்கி கொண்டு, முதன்முதலில் பெங்களூருவில் கைவரிசை காட்ட தொடங்கினார். அப்போது 2011-ஆம் ஆண்டு பெங்களூரு போலீசார் ஒரு கொள்ளை வழக்கில் முருகனை கைது செய்தனர். அதன்பிறகு ஜாமீனில் வெளியே வந்த அவர், தனது இருப்பிடத்தை ஐதராபாத்துக்கு மாற்றினார். அங்கு சொந்தமாக வீடு வாங்கி குடியேறிய முருகன் அங்கு அக்கம்பக்கத்தினரிடம் தான் ஒரு திரைப்பட தயாரிப்பாளர் என்று கூறி உள்ளார்.

திரைப்படங்களை விரும்பி பார்க்கும் முருகன், திரைப்பட தயாரிப்பாளராவதையே தனது லட்சியமாக கொண்டு இருந்தார். அதேநேரம் வங்கிகளிலும், நகைக்கடைகளில் புகுந்து லாவகமாக கொள்ளையடிப்பதிலும் முருகனுக்கு நாட்டம் இருந்துள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் தெலுங்கானா மாநிலத்தில் பாலன்நகரிலும், அதேஆண்டு டிசம்பர் மாதம் மக்பூப்நகரிலும் முருகனின் கொள்ளை கும்பல் தொடர் கொள்ளையில் ஈடுபட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த தெலுங்கானா மாநிலம் சைபராபாத் போலீசார் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு, கடந்த 2015-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முருகன் தலைமையிலான கொள்ளை கும்பலை கைது செய்தனர்.

இந்த கும்பலிடம் இருந்து ரூ.1 கோடியே 72 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கிலும் ஜாமீனில் வெளியே வந்த முருகன் மீண்டும் 2 ஆண்டுகளுக்கு பிறகு, சென்னை அண்ணாநகர் திருமங்கலம் பகுதியில் 17 வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்தார். அப்போது அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிந்து, திருவாரூர் முருகன், தினகரன், கோபால், ரகு உள்பட 5 பேரை கைது செய்தனர். இவர்களிடம் 5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மெலிந்த உடல் தேகத்துடன் பார்ப்பதற்கு பரிதாபத்துக்குரிய ஆளை போல் காட்சி அளிக்கும் முருகன், போலீசாருக்கே சவால் விடும் வகையில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றுவதில் கைத்தேர்ந்தவராக இருந்துள்ளார். கொடூர நோயால் பாதிக்கப்பட்ட முருகன் அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வந்துள்ளார்.

திருச்சி நகை கொள்ளை வழக்கில் தொடர்புடைய திருவாரூர் முருகன் பெங்களூரூ சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமடைந்ததால்  பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான்.

6 மாதமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொள்ளையன் முருகன் உயிரிழந்தார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
25-Nov-2020
பெட்ரோல்
Rupee 84.64(லி) Diesel Rate
டீசல்
Rupee 76.88(லி) Diesel Rate
பி.எஸ்.இ
44601.63 44247.12
என்.எஸ்.இ
12978.00 13079.10
1 கிராம்
Rupee 4640 Gold Rate
8 கிராம்
Rupee 37120 Gold Rate
1 கிராம்
Rupee 64.50 Gold Rate
1 கிலோ
Rupee 64500 Gold Rate