சேலம் மாவட்டம், ஆத்தூரில் இன்று (நவ. 27) நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "முதல்வர் பழனிசாமி எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், நிவர் புயலால் தமிழக மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. நிவர் புயல் வந்த நேரத்தில் முதல்வர் பழனிசாமி நேரடியாக களத்தில் இறங்கி பணியாற்றி, அதிகாரிகளுக்கு உடனுக்குடன் மீட்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை வழங்கும் பணியில் ஈடுபட்டார். மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் வரலாறு தற்போது திரும்பியிருக்கிறது.
புயல் வருவதற்கு முன்பாக அடையாற்றில் வெள்ளம் சூழ்ந்து விடாமல் தடுத்திட செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து சிறிது சிறிதாக நீர் திறக்கப்பட்டு, கடலில் கலக்கவிடப்பட்டது. புயல் பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் விதமாக, ஒரு லட்சம் பேர் புயல் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்குத் தேவையான மருந்து, உணவு உள்ளிட்ட பொருட்கள் தரப்பட்டன.
முதல்வர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக மிகப்பெரும் புயலாக கருதப்பட்ட நிவர் புயலால், மக்கள் எவ்வித பாதிப்பும் இன்றி பாதுகாக்கப்பட்டனர். அதிமுக அரசு மக்களை பாதுகாக்கும் அரசாக செயல்பட்டு வருகிறது.
புயலின் போது களத்தில் இறங்கி செம்பரம்பாக்கம் ஏரியை முதல்வர் பார்வையிட்டார். இவ்வாறு இயல்பான தலைவர்களை தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர். நேர்மையான, எளிமையான தலைவராக முதல்வர் பழனிசாமி இருந்து மக்களுக்கான நல்லாட்சியை வழங்கி வருகிறார்" என்றார்.