இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி, இன்று காலையில் கொல்கத்தாவில் பெஹலாவில் உள்ள தனது வீட்டில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து, கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சவுரவ் கங்குலி மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், கங்குலிக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து பேசிய மருத்துவர் அஃப்டாப், ‘சவுரவ் கங்குலிக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது.
அடுத்துவரும் 24 மணி நேரத்துக்கு அவர் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார். அவர், தற்போது சுயநினைவில் தான் உள்ளார். அவருடைய இதயத்தில் இரண்டு அடைப்புகள் உள்ளன. அதற்கு சிகிச்சையளிக்கப்படும். தற்போது, அவரது உடல்நிலை சீராக உள்ளது.
திங்கள் கிழமை ஆலோசனை நடத்தவுள்ளோம். அப்போது, என்ன சிகிச்சைத் தேவை என்பது குறித்து நாங்கள் முடிவு செய்வோம். அவர், ஆபத்தான கட்டத்தில் இல்லை. அவர், தற்போது நன்றாக பேசிக் கொண்டு இருக்கிறார்’ என்று தெரிவித்தார்.