சென்னை டாக்ஸ் என்ற யூ டியூப் சேனல், சென்னை பெசன்ட் நகரில் ஒரு இளம்பெண்ணிடம் ஆபாசமாக பேசி, வீடியோ எடுத்து வெளியிட்டது சர்ச்சையை கிளப்பியது. அந்த சேனல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்
இது குறித்து பெசன்ட் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில், சென்னை டாக்ஸ் சேனலின் தொகுப்பாளர், கேமரா மேன் மற்றும் உரிமையாளர் ஆகிய 3 பேரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
பார்வையாளர்களை அதிகரிக்கச் செய்ய யூ டியூப் சேனல்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.
இந்த நிலையில், யூ டியூபில் ஆபாசமாக அருவருக்கத்தக்க வகையில் வீடியோ வெளியிடப்பட்டிருந்தால் அதனை உடனே நீக்குமாறு சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் ஆபாச பேட்டிகளை எடுத்து அதனை ஒளிபரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையர் மகேஷ் குமார் யூ டியூப் சேனல்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக, சென்னை பெசன்ட்நகர், நீலாங்கரை கடற்கரை பகுதியில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அடையாறு துணை கமிஷனர் விக்ரமன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுபோன்ற செயல்களில் யாராவது ஈடுபட்டால், அது பற்றி 8754401111 என்ற செல்போன் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.