சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள ரெட்டியூர் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது எருதாட்டம் நிகழ்ச்சி எளிமையாக நடத்தப்படுவது வழக்கம். இதுபோல ரெட்டியூர் கண்ணனூர் மாரியம்மன் கோவில் திடலில் எருதாட்டம் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி கண்ணனூர் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
பின்னர் ரெட்டியூர் மற்றும் சூரமங்கலம், பழைய சூரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 40க்கும் மேற்பட்ட எருதுகள் பிடித்து வரப்பட்டது. பின்னர் ஒவ்வொரு எருதுகளாக சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருந்து கண்ணனூர் மாரியம்மன் கோவில் பகுதிக்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பிடித்து வந்து எருதாட்டத்தை நடத்தினர்.
எருதுகளை கயிறுகள் மூலம் கட்டி பாதுகாப்பாக கண்ணனூர் மாரியம்மன் கோவில் அருகே கொண்டு வந்து சாமியை வணங்கி மீண்டும் எருதுகளை பிடித்துச் சென்றனர். இதில் கலந்து கொண்ட எருதுகளுக்கு பழம் மற்றும் பொங்கல் வழங்கப்பட்டது.
எருதாட்ட நிகழ்ச்சியை காண பல்வேறு பகுதியிலிருந்து சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ரெட்டியூர் பகுதியில் திரண்டனர்.
எருதாட்டம் நிகழ்ச்சியை காண வந்த பெரும்பாலானோர் முகக்கவசம் அணிய வில்லை. இதை அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் அங்கு வந்து பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என எச்சரிக்கை செய்தனர்.
எருதாட்டத்தைக் காண கூட்டம் அதிகமானதால் காவல் ஆய்வாளர்கள் ரமேஷ் மற்றும் கந்தவேல் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு கண்காணித்தனர்.