தமிழகத்தில் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அதிமுக மற்றும் திமுகவினர் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுக சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்டம் தோறும் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், திருப்பத்தூரில் நேற்று பகல் மக்கள் கூட்டத்தின் நடுவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அப்போது அருகில் உள்ள மசூதியில் முஸ்லிம்கள் தொழுகை மேற்கொண்டனர். அந்த தொழுகை மேற்கொள்ளும் சத்தம் ஒலிபெருக்கியில் கேட்டவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக தனது பேச்சை நிறுத்தினார்.
தொழுகை முடியும்வரை அவர் பேசாமல் அமைதி காத்தார். தொழுகை முடிந்ததும் அவர் பேச்சை தொடங்கினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டி, கைதட்டி ஆரவாரம் செய்தனர்.