ஆறுமுகத்தோனின் அவதார தத்துவம் விதி மாறும் இரகசியம்

Home

shadow

     

     இப்பிரபஞ்சம் பஞ்ச சக்திகளான ஆதிசக்தி, பராசக்தி, இச்சாசக்தி, ஞான சக்தி, கிரியா சக்திகளால் இயங்கிக் கொண்டிருக்கிறது. இச்சக்திகளை இயக்குபவர் அருவுருவான ஆதி அந்தமில்லா, முழு முதற் பரம்பொருளான சிவபெருமானாகும். ஐந்து தொழில்களான, படைத்தல், காத்தல், அழித்தல், அருளல் மறைத்தலை புரியும் ஈசனின் முகங்கள் ஐந்தும் பஞ்ச பூதங்களாகும். சிவம் எனறால் ஜீவன், உயிர், மங்களம் எனப் பொருள்படும். சர்வத்தையும் அருவாய், சூட்சுமமாய், உள்ளிருந்து உயிராகி இயக்குவது "சிவமான" போதும், அகிலத்தையும் உருவாய், உடலாய், காட்சிக்கு சாட்சியாகி ஸ்தூலமாய் இயக்கிக் கொண்டிருப்பது "சக்தியாகும்". மின் விசிறி சக்தியானால் - மின்சாரம் தான் சிவமாகும். உலக இயக்கத்திற்கு சிவசக்தி ரூபம் ஞான - மாயை, சொரூபமாகும். உடலான மாயை வென்றால் மட்டுமே உயிரான ஞானத்தை அடைந்திட முடியும். ஆசைகளை அனுபவிக்கும் உடலே கர்மாவின் காரணியாகும்.

உயிர்களின் இகபர சுகத்துக்கத்தை நிதம் பெற காரணமான பல ஜென்ம கர்மாக்களை எல்லாம் சம்ஹரித்து  பிறவி இல்லா பெரு நிலையை அருள்பவர் சிவபெருமான். ஜீவன்களின் கர்ம இரகசியங்களை அறிந்த சிவபெருமான் சதா சர்வ காலமும் யோக நிஷ்டையில் ஆழ்ந்திருப்பவர். அவருக்கு 64 வடிவங்கள் உண்டு. மும்மூர்த்திகளான படைக்கும் பிரம்மாவும், காக்கும் விஷ்னுவும், அழிக்கும் ருத்திரனும் கூட ஈசனால் நியமிக்கப் பட்டவர்களே. மும்மலங்களான ஆணவம், மாயை, கன்மங்களை ஜீவன்களிடம் கொண்டு சேர்த்து பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப விதியாகி, நன்மை, தீமைகளை நவகிரகங்கள் மூலம் அனுபவிக்கச் செய்து, விதிகளையும், விதி விலக்குகளையும் முடிவு செய்பவர் சிவபெருமானாகும்.

ஈசனின் திருவிளையாடல்கள் அனைத்தும் "உயிர்கள் தன்னிலை உணர்ந்து உயர் நிலையை அடைந்திடவே நிகழ்த்தப்பட்டது. இதில் தட்சிணாமூர்த்தி வடிவமும் ஒன்று பிரம்ம புத்திரர்களான சனகாதி முனிவர்களுக்கு ஞானத்தை மௌனத்தின்  மூலம் உபதேசிக்க சிவன் எடுத்த வடிவமே தட்சிணாமூர்த்தியாகும். ஆனால் இந்த வடிவத்தின் முடிவே ஞானத்தின் சுடரான முருகனின் அவதாரமும் நிகழ்ந்தது. பொதுவாக தென்திசையை எம திசையென எண்ணி எல்லோரும் அஞ்சுவர். ஆனால் உண்மையில் ஞானத்தை அருள்வது தென்திசையாகும்.

தென்திசை நோக்கி தட்சிணாமூர்த்தி கோலத்தில் சிவன் அமரும் முன், சூரபத்மன் என்னும் அசுரன், ஈசனிடம் தங்களால் உருவான சக்தியைத் தவிர வேறு எவராலும் மரணம் நிகழக் கூடாது என்னும் வரத்தை வேண்டிப் பெற்றான். சிவன் யோகத்தில் ஆழ்ந்த நேரத்தில் இனி தனக்கு மரணமே இல்லை என்ற மமதையில் சூரன் ஈரேழு பதினான்கு லோகத்தையும் ஆட்டிப் படைத்தான். தேவர்களை சிறை பிடித்து இம்சித்தான். தேவ லோகத்தை தன் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தான். யோகத்தில் ஆழ்ந்திருக்கும் சிவபொருமான் கண் விழித்தாலே இனி தங்களுக்கு வாழ்வு என்ற நிலையில் தேவர்கள் அனைவரும் ஒருவழியாக மன்மதனை சமாதானப்படுத்தி சிவனின் தவத்தை கலைக்கும் காம பாணத்தை ஏவச் செய்தனர்.

தவம் கலைந்த சிவன் கோபத்தில் நெற்றிக் கண்ணால் காமனை சுட்டெரித்தார். பின் மன்மதனை பிரிந்த ரதியை தேற்றிய ஈசன் நடந்தவை யாவும் தனது திருவிளையாடல் எனக் கூறி மன்மதனுக்கு உருவமில்லா உடலை அருவமாய் ரதி மட்டும் காணும் தோற்றத்தை தந்தருளினார். உயிர்கள் மாயையில் உழல்வது விதிப்பயனான போதும் ஞானத்தை அருள்வதே இறைவனின் கடமையாகும்.

மாயை தான் உயிர்களின் துன்பத்திற்கு காரணமாவதால் புலன்களின் தவறேதுமில்லை என்று உணர்ந்த ஈசன் யோகத்தின் முடிவில் அருளிய Òஞானம்Ó தான் Òமுருகனாகும்Ó. சத்தியோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம் என ஐந்து முகங்களுடன் ஆறாவது முகமாக அதோ முகத்தையும் சேர்த்து ஆறு முகமாய் முருகன் சிவனின் சக்தியால் சரவணப் பொய்கையில் அக்னி ரூபத்தில் அவதரித்தார். சிவசக்தி முக்கோணங்கள் இணைந்து பிறந்ததால் அறுகோண வடிவெடுத்தார். முருகன் பிறக்கும் முன்னே பிரணவ இரகசியத்தை தந்தை மூலம் அறிந்ததால் உயிர்களின் ஜனன மரண கர்மாவின் விளைவுகளை உணரப் பெற்றார். இதுவே தன்னை எதிர்த்த சூரபத்மனையும் மன்னித்து சேவல், மயிலாய் ஆட்கொண்டு அருளச் செய்தது.

சிவசக்தி வடிவமான முருகப்பெருமானின் திருவிளையாடல்கள் எண்ணிலடங்காது. மிகவும் இளகிய மனம் படைத்த முருகப் பெருமான் பாவிகளையும் இரட்சிக்கும் கருணை உள்ளம் கொண்டவர். அவரை எண்ணி வணங்கியவர் வாழ்வில் அற்புதங்கள் நிகழ்த்துபவர். எத்தனை தவறு செய்திருந்த போதும் மனமுறுகி மன்னிப்பு கோரி நின்றால் உடனே ஓடி வந்து அருள்புரியும் ஆற்றல் கொண்டவர். இதுவரையில் முருகப்பெருமான் ஒருவரையும் தண்டித்ததில்லை எதிர்த்தவரையெல்லாம் மன்னித்து ஆட்கொள்ளவேச் செய்தார். கலியுகக் கருணை கடவுளான முருகப்பெருமான் தலைமையில், உலக மக்களின் நன்மைக்காக, பக்தர்களின் குறைகளை நீக்க வேண்டி பிரதி பௌர்ணமி தோறும் பழநி மலையில் சித்தர்கள் கூட்டம் நடப்பதாக ஐதீகம். விதியை எண்ணி துயரப்படுவோர், தூய்மையான மனதோடு தொடர்ந்து முருகப் பெருமானை வழிப்பட்டால் வாழ்வில் மாற்றம் வரும் என்பது நிச்சயம்.

இது தொடர்பான செய்திகள் :