ஆலய இரகசியங்கள்

Home

shadow

      

         சித்தர்களின் ஜீவசமாதி ஆலயங்களின் சூட்சுமத்தை உணர்ந்து, எல்லா இடங்களிலும் சக்தி மிகுந்த ஆலயங்களை உருவாக்க பிற்காலத்தவர்கள் எண்ணினர். சித்தர்களின் பாடல்களில் உள்ள மந்திர-தந்திர-யந்திர பிரயோகங்களால் பஞ்ச பூதங்களை ஒருங்கே சீராய் தொடர்ந்து ஓர் இடத்தில் குவிப்பதன் மூலம் பிரபஞ்ச ஆற்றலை வெளிக்கொணர முனைந்தனர்.

உலகையே காத்து இரட்சிக்கும் இறை சக்தியான பிரபஞ்ச ஆற்றல் ஒலி, ஒளி வடிவில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒலி-ஒளியை குறிப்பிட்ட ஓர் இடத்தில் தொடர்ந்து பரவச் செய்து, பஞ்சபூதத்தையும் ஆகர்ஷணம் செய்தால் சித்தர்கள் ஜீவசமாதிக்கு ஈடாக ஆலயம் உருவாக்கிட முடியும் என நம்பினர்.

இதற்காக தேர்வு செய்யப்பட்ட இடம் தான் ஸ்தலங்களாகும். இயற்கையிலே சக்தி நிறைந்த பூகோளப் பகுதிகளை கண்டறிந்து வான மண்டலத்துடன் மந்திர, தந்திர, யந்திர பிரயோகத்தினால் தொடர்பு கொள்கையில், பஞ்ச பூத சக்தியில் மண் பூதம் ஆகர்ஷணமானது. பிரபஞ்ச ஆற்றலும் பின் வெளிபட இவ்விடங்களில் ஆலயங்களை உருவாக்கி ஸ்தலம் என்று குறிப்பிட்டனர்.

எல்லா உயிரினங்களுக்கும் அத்தியாவசியமான தூய காற்றை ஆலயத்துள் வருடமெல்லாம் வணங்க வருவோர் சுவாசித்து உடலும் மனமும் பலப்பட்டு ஆரோக்கியம் சீராகி எண்ணம் தெளிவாகிட சித்தர்கள் குறிப்பிட்ட மூலிகை இரகசியங்களில் இன்ன-வேர், செடி, கொடி, மரம் மூலம் வெளிவரும் பிராணனான காற்றில் உள்ள இரகசியங்களை மிகச் சரியாக தெரிந்து ஆலயங்களில் வளர்க்கப்பட்ட மரங்கள் தான் ஸ்தல விருட்சங்களாகும். இது சர்வ ரோக நிவாரணி. இதுவே பஞ்சபூதத்தில் காற்று பூத ஆகர்ஷண இரகசியமாகும்.

மரம் வளர்த்தால் மழை பொழியும். மழை நீரே காற்றுக்கு அடுத்து வாழ்வியல் ஆதாரம், மரங்களுக்கும் ஆகாரம். மழை நீரை சேகரித்து மண் வளம் பெருக உருவாக்கப்பட்டதே ஆலயக் குளங்களாகும். இதன் புனிதத் தன்மையை பாதுக்காக்க வேண்டி நீரை தீர்த்தம் என்று குறிப்பிட்டனர். இதுவே பஞ்ச பூதத்தில் நீர் பூத ஆகர்ஷணமாகும்.

இக்காலத்தில் உள்ள சிம்கார்டுகள் போல அக்காலத்து சித்தர்களின் யந்திரங்கள். இந்த யந்திரங்களுக்கு ஒலி ஒளியை இயக்கும் சக்தி உண்டு. கருங்கல்லுக்கோ பஞ்ச பூதத்தையும் ஈர்க்கும் தன்மை உண்டு. ஆகவே கடினமான மலைகளை குடைந்து தோஷமில்லா கற்களை தேர்வு செய்து, பாரம்பரியமிக்க சிற்பியைக் கொண்டு கடவுள் உருவத்தை வடித்தனர். பின்னர் ஒரு நன்னாளில் மூன்று பக்கங்கள் மூடப்பட்ட ஓர் அறையில் இச்சிலைக்கடியில் சித்தர்களின் யந்திரங்களை அஷ்டபந்தனத்தால் பிரதிஷ்டை செய்தனர். கண் திறக்கப்பட்ட சிலைக்கு மூலவ மூர்த்தி என இறை நாமத்தை சூட்டி அறைக்கு கற்பக் கிரகம் என பெயரிட்டு 24 மணி நேரமும் தீப ஒளி சுடரால் நெருப்பு சக்தியை பரப்பினர். இதுவே நெருப்பு பூத ஆகர்ஷண சூட்சுமமாகும்.

கோபுரங்களைக் கட்டி கலசங்களை வைத்து கற்பக் கிரகத்தினுள் இருக்கும் இறைவனுக்கு பலவிதமான அபிஷேகங்கள், ஆராதனைகள் நறுமணம் கமழும் பூக்களால் அர்ச்சனைகள், 6 கால பூஜைகள் என ஒலி ஒளி மூலம் மனோ சக்தி கொண்டு மந்திர, தந்திர யந்திர பிரயோகத்தால் ஆலயத்திற்கும் ஆகாயத்திற்கும் தொடர்பு உண்டாக்கினர். இதுவே ஆகாய பூதமான ஞானத்தின் ஆகர்ஷணமாகும்.

ஒலி, ஒளியான பரம்பொருளை அனுபவத்தால் உணர்ந்தவர்கள் தான் பின்னாளில் ஆலயத்தின் புனிதத் தன்மை பாதுகாக்க வேண்டி ஆகம விதிகள் என்ற பெயரில் சாஸ்திர சம்பிரதாயங்களை உருவாக்கி தீட்டு, தெய்வ குற்றம் என்று பயமுறுத்தினர். சித்தர்களின் ஜீவ சமாதி இரகசியங்களையும் - ஆலய வரலாற்றையும் பார்த்தோம். அடுத்து இறை நாமத்தின் தத்துவத்தையும் பரிகார விளக்கத்தையும் காணவிருக்கிறோம்.

கர்ம வினை தீர்க்கும் திருத்தலம் : சென்னை கோயம்பேட்டில் உள்ள குறுங்காலீஸ்வரர் சகல பாப தோஷ சாப விமோட்சன ஸ்தலமாகும். இங்கு குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளிலும், பிரதோஷ நாட்களிலும் சரபேஷ்வரர் வழிபாடு மற்றும் நந்தி வழிபாடு செய்வது மிகவும் சிறப்பாகும். தூணில் அமைந்திருக்கும் சரபேஷ்வரரை சுற்றிலும் முறையே விநாயகர், சிவன், விஷ்ணு (பெருமாள்) மற்றும் அனுமார் ஆலயங்கள் அமைந்திருப்பது சர்வ சக்தியையும் முழுமையாய் வணங்கிட கிடைத்த பிராப்தமாகும். இது பித்ரு தோஷ நிவர்த்தி ஸ்தலமாகும். இங்கு நடக்கும் கூட்டு பிராத்தனைகளில் தொடர்ந்து 21 ஞாயிற்றுக் கிழமைகள் இராகு காலத்தில் சரபேஷ்வரரையும் 9 பிரதோஷங்கள் நந்தியம் பெருமானையும் வழிபடுவோர்க்கு சகல பிணிகளும் நீங்கும், காரியத் தடைகள் விலகி வாழ்க்கை வளம் பெறும்.

இது தொடர்பான செய்திகள் :