கீதையில் கிருஷ்ண பரமாத்மா இடைவிடாது தொடர்ந்து கர்மம் ஆற்றுவது ஒன்று மட்டும்
தான் அனைத்து விதமான துன்பங்களில் இருந்தும் விடுபட உகந்த "பரிகாரம்"
என்று கர்ம யோகத்தை போற்றி பரைசாற்றுகிறார். ஆன்மிகம் கர்மாவை இயக்கம் என வரையறுக்கிறது ஆகவே
தான் பரந்தாமன் கடமையை செய் - பலனை எதிர்பாராதே" ஏனெனில் எதிர்வரும் யாவும்
இன்று உன் செயலால் நாளை தீர்மானிக்கப்படுகிறது என்று என்றோ நியூட்டனின் மூன்றாம்
விதியை "கர்ம யோகமாய்" பாரோர் விளங்க வழங்கினார்.
ஆனால் முருகப் பெருமானோ, புறஉலக சுகத்தில் லயத்து, மாயையில் மூழ்கி, பாவம் பல புரிந்து புண்பட்ட அருணகிரியாரின், மனம் தெளிவுப்பெற அக ஒளி ஏற்றி ஆட்கொண்டு "சும்மா இரு" என
ஞானயோகத்தை உபதேசித்தார். காரணம் மனமே மும்மலத்தால், கர்மாவின் காரணியாக இருந்து, புத்தியை இயக்கி, புலன்கள் மூலம் எல்லாச் செயல்களையும் ஆசையினால் செய்ய வைத்து, விதிக்கு வித்திடுகிறது
என்பதினால் மனமானது எல்லாச் சூழ்நிலைகளிலும் உண்மை நிலையை உணர்ந்து கடமையாற்றிட
மெய்ஞானமான இறைவனின் அருள் அவசியமாகிறது. மனித வாழ்வில் கிருஷ்ண பரமாத்மாவின்
கர்மயோகம் திருமுருகப் பெருமானின் ஞான யோகத்துடன் இணைந்திருப்பதே விதியை வெல்லும்
சூட்சுமமாகும்.
காலபுருஷ தத்துவம் - கர்மாவின் இரகசியம்
இப்பிறவியில் ஏற்படும் அனைத்து நிகழ்வுகளும் பிரபஞ்சமான 12 இராசி கட்டங்களுக்குள்
அடங்கி விடுகிறது. காலபுருஷ தத்துவமே விதியின் இரகசியமாகும் இனி இதன் தத்துவத்தை காண்போம்.
காலபுருஷ தத்துவ இரகசியம்
கிரகங்கள் காரகங்கள் பாவங்கள்
செவ்வாய் : வினை 1. நேர்முகம 8. மறைமுகம்
சுக்கிரன் : இச்சை 2. ஆசை, 7.
காமம்
புதன் : புத்தி 3. முயற்சி, 6. சூழ்ச்சி
சந்திரன் : மனம் 4. சுகம்
சூரியன் : ஆத்மா 5. பூர்வபுண்ணியம்
குரு : ஞானம் 9. அறிவு 12. மோட்சம்
சனி : எதிர்வினை 10. கர்மா - காரணம் 11. பலன் - காரியம்
காலபுருஷ தத்துவத்தின் சாரம்சத்தைக் கொண்டு எல்லாவிதமான கர்ம வினைகளின் காரண
காரியத்தையும் எளிதில் அறிந்துக் கொள்ள முடியும். கிரகங்கள் எப்பொழுதும்
மனிதர்களின் எண்ணங்களாகவும், செயல்களாகவும் வினையாற்றி எதிர்வினை மூலம் விதி செய்பவை.
வினைகளுக்கு காரகம் வகிக்கும் செவ்வாய் தான் எல்லாச் செயல்களையும்
நேர்முகமாகவோ (1ஆம் பாவம்) அல்லது மறை
முகமாகவோ (8ஆம் பாவம்) செயலாற்றுபவர்.
கால புருஷ இலக்கினமாகி இலக்கினத்திலே செவ்வாய் (வினைக்கு காரகர்) ஆட்சி பெற்ற
காரணம் இதுவேயாகும். பிறக்கும் போது முன்வினைப்படி பூமிக்கு பிரவேசிக்கும்
ஆத்மாவானது சூரிய மண்டலத் தொடர்புடையது. பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ஆமிட அதிபதி சூரிய பகவானே
ஆத்மகாரனுமாவதால் எல்லா உயிர்களும் சூரிய பகவான் துணைக் கொண்டே மண்ணில்
பிறக்கின்றது இதுவே காலபுருஷ இலக்கினத்தில் சூரியன் உச்சமடையும் சூத்திரமாகும்.
ஆனால் அதே சமயத்தில் பிறந்தவுடன் எல்லாக் குழந்தைகளும் சுவாசிப்பது, அழுவது மற்றும்
சிரிப்பதைத் தவிர வேறெந்த வினையும் ஆற்ற இயலாது என்பதினால் எதிர் வினைக்கு காரகம்
வகிக்கும் சனிபகவான் மேஷத்தில் நீச்சமடைகிறார் இருப்பினும் பெற்றவர்களின் கர்மாவை
கொண்டு எதிர் வினையாற்றி பெற்றோர்களுக்கு சந்தோஷம் அல்லது கவலையை அக்குழந்தையின்
ஆரோக்கியம் சார்ந்து தருகிறார்.
இச்சைகளுக்கு காரகம் வகிக்கும் சுக்கிரன் தான் மனித மனதில் எண்ணங்கள் மூலம்
லௌகீக ஆசை (2ஆம் பாவம்) மற்றும் காமத்தை
(7ஆம் பாவம்) தூண்டுபவர் உலக
ஆசைகளை அனுபவிக்கவே சுகஸ்தானமான 4ஆம் பாவாதிபதியான உடல் மற்றும் மனோகாரகன் சந்திரன் காலபுருஷ 2ஆம் பாவத்தில் உச்சமடைந்து
இச்சைக்கு (சுக்கிரன்) துணை போகிறார்.
மனதில் தோன்றும் எண்ணங்கள் செயல் வடிவம் பெறவேண்டி புத்தியானது சந்தர்ப சூழ்நிலையின்
சாதக பாதகத்திற்கு ஏற்ப முதலில் முயற்சியும் (3ஆம் பாவம்) பின் முடியாவிட்டால் சூழ்ச்சியிலும் (6ஆம் பாவம்) இறங்க
வல்லது. இராமாயணத்தில் வாலி மீது
இராமபிரான் மறைந்திருந்து அம்பெய்தி கொல்லச் செய்ததும், மகாபாரதத்தில்
"கொல்பவனும் கண்ணன்-கொல்லப்படுபவனும் கண்ணன்Ó என்று பார்தனவனை (அர்ஜுனன்) வைத்து கர்ணனை வதைத்து, சாரதியான கண்ணனே பின்னவன்
புண்ணியங்களையும் தானமாய் பெற்றது யாவுமே 6ஆமிட சூழ்ச்சியின் சாதுர்யமாகும். இதுவே
இராஜ தந்திரத்தால் பெறும் வெற்றியின் இரகசியமுமாகும். வெற்றி ஒன்றை மட்டுமே
குறிக்கோளாகக் கொண்டு பயணிக்கும் புத்தியில் (புதன்) இச்சைகளுக்கு (சுக்கிரன்)
இடமில்லை என்பதை உறுதிபடுத்தவே புதனின் ஆட்சி, உச்ச மற்றும் சூழ்ச்சி பாவமான வெற்றியை குறிக்கும் 6ஆமிடத்தில் சுக்கிரன்
நீச்சம் பெறுகிறார்.
மனதிற்கு காரகம் வகிக்கும் சந்திரனே 4ஆம் பாவாதிபதியாகி சுகத்தை உடலுக்கு தந்து பாவத்திற்கு பலியாகிறார் இன்பமும்
துன்பமும் மனம் மூலம் தான் உடல் அனுபவித்து கர்மாவிற்கு வழிவகுத்து இறுதியில்
ஆத்மாவை உணர்ந்து மோட்சத்திற்கு (12ம் பாவம்) முயற்சித்து இறைவனை சரணடைகிறது, ஆகவேதான் ஞானக்காரகரான குருபகவான் சந்திரன் வீட்டில் உச்சம் பெறுகிறார்.
வினைகளால் தொடரும் மனிதப் பிறவி ஞானம் பெற்று மோட்சத்தை அடைய கர்மமற்று இருக்க
வேண்டும். இதை உணர்த்தவே வினைகளாற்றும்
செவ்வாய் மனோகாரகன் வீட்டில் நீச்சமடைகிறார். மனோசக்தியே ஞானசக்தியை அடையும்
மார்க்கம் அதுவே அனைத்திலும் மேலானது என்பதை அனுபவம் ஒன்று மட்டுமே உணர்த்தும்.
ஆத்மாவிற்கு காரகம் வகிக்கும் சூரிய பகவானே பரமாத்ம சொரூபமாகி மனிதர்கள்
மீண்டும், மீண்டும் மண்ணில் பிறக்க
காரணமாகிறார். மனிதர்கள் தங்கள் பாவங்களை தொலைத்து, புண்ணியங்களை கடந்து, கர்மமற்ற நிலையில் தான் ஜீவன் எது? ஆத்மா எது? எங்கிருந்து வந்தோம் எங்கே
செல்கிறோம் என்னும் தேடலில் இறங்கி இறுதியில் பரமாத்மாவை பற்றற்ற நிலையில்
கண்டுணர்ந்து ஜீவாத்மாவானது பரமாத்வை சென்றடைகிறது. ஆசைகள் தொடரும் வரை பிறவிகளும், தொடரும் என்பதை குறிக்கவே
காலபுருஷ 5ஆம் பாவாதிபதியான சூரியன்
காம பாவமான 7ஆம் பாவத்தில் நீச்சம்
பெறுகிறார். காமமே இச்சைகளைத் தூண்டி பிறப்பிற்கு காரணமாகி கர்மாவை சுமக்க
வைக்கிறது. இதுவே 5ஆம் பாவாதிபதியான சூரிய பகவான் பூர்வபுண்ணியத்திற்கு ஏற்ப பிறவிகளை நீள
வைக்கும் இரகசியமாகும்.
ஞானத்திற்கு காரகம் வகிக்கும் குருபகவானே ஒருவரின் அறிவாகி (9ஆமிடம்) அவ்வறிவும்
மூதாதயர் மூலம் பெறப்பட்டு, முன் ஜென்ம வாசனையால் வளர்க்கப்பட்டு தனித்திறமையாக ஒவ்வொருவரின் லட்சியமாக
வேறுபட்டு குடிக்கொண்டுள்ளது. அறிவே
மிருகமாய் அடங்காதிருந்த மனித மனதை பரிணாமத்தில் பண்பட வைத்து பகுத்தறிவு மூலம்
மெய்ஞானத்தை உணர்த்தி எல்லாவற்றையும் அனுபவத்தால் கடந்து இறுதியில் மோட்சமே (12ஆம் பாகம்) பிறப்பின்
லட்சியமென இறைவனை சரணடைந்து பிறவிகள் தொடராமல் அறுக்க வைக்கிறது. ஆனால்
மனிதர்களின் இச்சைகள் இருக்கும் வரை கர்மங்களும் தொடரும் என்பதை உணர்த்தவே மோட்ச
வீட்டில் பிறவிகள் தொடர காமக்காரகனான சுக்கிரன் அயன சயன சுகமே பெரிது என
சிற்றின்பத்தை நாட வைத்து பேரின்பத்தை (மோட்சம்) அடையவிடாமல் தடுத்து விடுகிறான்.
மேலும் மெய்ஞானமான பரம்பொருளை உணர என்றுமே ஆராய்ந்து ஆதாரம் கேட்கும் விஞ்ஞான
புத்தி உதவுவதில்லை. அனுபவத்தால் உணரக்கூடிய இறைவனை (மோட்சம்) தர்க்கத்தால் புத்தி
என்றுமே அறிய முடியாது என்பதை உணர்த்தவே ஞானக்காரகன் குருவின் வீட்டில்
புத்திக்காரகன் புதன் நீச்சமடைகிறான்.
எதிர்வினைக்கு காரகம் வகிக்கும் சனிபகவானே ஒவ்வொருவரின் கர்மாவையும்
பரிசிலித்து பாவத்திற்கு தண்டனையும், புண்ணியத்திற்கு சகல மங்களமும் அருள்பவர். வினைகளாற்றும் செவ்வாய் கர்ம
பாவத்தில் (10ஆம் பாவம்) உச்சம் பெறும்
சூட்சுமம் வினையே எதிர்வினைக்கு Òமூலம்Ó என்பதை உணர்த்தி அதன் பலனை
(11ஆம் பாவம்) இலாபமாக அவரவர்
விதிப்படி சனிபகவான் வழங்குகிறார். அஞ்ஞானமே அறியாமையால் மாயையில் மயங்க வைத்து
பாவங்கள் புரிய வைக்கிறது. இதுவே ஞானக்காரகன் குரு கர்ம பாவத்தில் நீச்சமடைய
காரணமாகும். மனிதர்கள் செய்யும் கர்மங்களுக்கு பெரிதும் துணைபோவது காமமே ஆகும்.
ஆகவே தான் காலபுருஷ கர்ம பாவத்திற்கு (10ஆம் பாவம்) 10ஆம் பாவமான 7ஆம் பாவத்தில் சனி பகவான்
உச்சம் பெற்று எல்லோரின் செயலையும் கண்காணித்து வருகிறார். 10ஆம் பாவ கர்மங்களைத்தான் சனிபகவான் இலாபமாக (11ஆம் பாவம்) வழங்குகிறார். ஆயினும் அவரை 6, 8, 12ஆம் இடங்களின் தீய ஆதிபத்தியத்தின் பலன்களை தருபவர் என கூறப்படும் சூட்சுமத்தை
அடுத்து ஆராயலாம். மேலும் காலபுருஷ 8 ஆமிடத்தில் சந்திரன் நீச்சமடையும் காரணத்தையும் காண்போம்.
கர்ம வினை தீர்க்கும் பரிகாரத் திருத்தலங்களில் வாழ்வில் வெற்றி பெறவும், எதிர்காலம் சிறக்கவும், எல்லாச் செல்வங்களையும்
பெற்று இன்புறவும் வடபழநி ஆண்டவரை தரிசிப்போம் சென்னை கோடம்பாக்கம் அருகே
வடபழநியில் குடிக்கொண்டுள்ள முருகப்பெருமானை செவ்வாய் கிழமைகளில், கிருத்திகை மற்றும்
ஞாயிற்றுக் கிழமைகளில் வரும் குருஹோரையில் சென்று தரிசித்து வருவோர்க்கு நீண்டநாள்
நடைபெறாமல் தடைபெற்று நின்ற காரியங்கள் யாவும் உடனே கைக்கூடும். ஆயுள் ஆரோக்கியம்
பெருகும் எதிரிகளின் பயமின்றி எடுத்த காரியத்தில் எளிதில் வெற்றி பெறலாம்
பொருளாதாரம் சீராகும், குடும்பத்தில் குழந்தைபேறு உண்டாகும் எல்லாம் சுபமாகும் சந்தோஷம் நிலைக்கும்.