சந்திர மண்டலம்-- ஆகாமிய கர்மா

Home

shadow


      "காலம் கருதி இருப்பர் கலங்காது

      ஞாலம் கருது பவர்" - குறள் (485)

   மனித வாழ்வில் காலம் என்பது மிக மிக முக்கியமானது ஆகும். ஒருவர் தனது அன்றாட வாழ்வில் ஆற்றும் சிறு, சிறு காரியங்களும், நாளும் நடைபெறும் பல சம்பவங்களும் எதிர்பாராத நிகழ்வுகளும் விதி என கூறப்பட்டாலும்காலத்தை அறிந்து, ஆராய்ந்து முன்னமே கணித்து, திட்டமிட்டு, அனுசரித்து, செயல்படும் போது, தடைகளை தகர்த்தெறிந்து வாழ்வில் எதையும் எதிர் கொண்டு எளிதில் வெற்றியை அடைய முடியும். காலத்தை அறிய உதவுவது வானசாஸ்திரமெனில், அறிந்தவவற்றை பகுத்து பார்த்து அனுபவத்தில் ஆராய்ந்து காலக் கோலத்தை பலனாய் உரைத்து யாவரும் பயன் பெற உறுதுணையாக இருப்பது ஜோதிடமாகும்

விதியை மதியால் வெல்ல முடியும் எனும் சூத்திரம் கதியான பரம்பொருளை பற்றுவது மட்டுமல்லாது மதியான சந்திரனின் கோட்சார கிரக நிலைகளை உணர்ந்து நடப்பதில் தான் "பரிகாரங்கள்" பலன் தரும் சூட்சுமமும் அடங்கி உள்ளது. 

மேஷ இராசியில் சூரியன் உச்சம் பெறும் வெயில் காலங்களில் குளிர்பானக் கடைத் திறந்தால் உடனே பலன் பெறலாம் அதே போல் சூரியன் நீச்சமாகும் துலாம் இராசியான மழை மாதத்தில் தேநீர் கடை (டீ கடை) தொடங்கினால் நல்ல இலாபம் ஈட்டலாம். ஆனால் இதையே சற்று மாற்றி தலைகீழாய் செயலாற்றினால் உடனடி பலனுக்கு உத்திரவாதம் இல்லை. பரிகாரங்களும் இவ்வாறே காலம் அறிந்து செய்தாலே பலனளிக்கும்.

ஒளி கிரகங்களான சூரிய - சந்திர  இயக்கமே பகல் இரவாய் பட்சமாய், அயனமாய் ருதுவாய் காலத்தை வழி நடத்துகிறது. மேலும் பூமியில் வாழும் மனிதர்கள் மீது நவகிரகங்களும் பஞ்சபூத துணைக் கொண்டே வினையாற்றுகிறது. பஞ்சாங்கத்தில் குறிக்கப்பட்டிருக்கும் கிழமை, நட்சத்திரம், திதி, யோகம் கரணத்தில் தான் எல்லாக் காரியங்களும் காரணத்துடன் நடைப்பெற்று வருகிறது. இதில் விதியை வெல்லும் அஸ்திரமாக திகழ்வது ஒருவரின் தாராபலம், சந்திரபலம் மற்றும் ஹோரா பலம் உள்ள நேரத்தில் ஆற்றும் காரியங்களாகும். இதுவே ஒரு செயலின் வெற்றியை தீர்மானிக்கிறது. மேலும் பரிகாரங்கள் பலன் தரும் சூட்சுமமும் இதில் தான் அடங்கி உள்ளது. இனி சந்திர மண்டல இரகசியங்களைக் காண்போம்.

சந்திர மண்டலம்: மதி-ஆகாமிய கர்மா-மனம் கோட்சாரம்:

       பிரபஞ்ச சக்தியானது நட்சத்திர மண்டலத்தின் ஆதிக்கத்தை சூரிய மண்டலத்தை சார்ந்த கிரகங்கள் மூலம் பூமியில் வாழும் மனிதர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் இத்தாக்கத்தின் அதிர்வுகளை சந்திரனே முதலில் வாங்கி பின் பூமியில் செலுத்துகிறது. ஆகவே தான் சித்தர்கள், சப்த ரிஷிகள் ஜோதிடத்தில் சந்திரனை மனோகாரகன், உடல்காரகன் என்றனர். எந்த ஒரு விஷயமும் மனமே முதலில் உள் வாங்கி அதன் விளைவான இன்ப துன்பத்தை உடலை அனுபவிக்கச் செய்கிறது. சஞ்சித கர்மாவால், பிராப்த கர்மாவை அனுபவிக்கும் மனிதன் வாழ்வில் ஏற்படும் நன்மை தீமைகளை முதலில் மனதால் தான் உணருகிறான். எவர் ஒருவரின் மனம் சதாசர்வ காலமும் நேர்மறை சிந்தனையால், பரம் பொருளால் ஈர்க்கப்பட்டு நாளும் தூய்ந்து துதிபாடிடுமோ அவரின் வாழ்வில் வரும் துன்பங்கள் பெரிய அளவில் பாதிப்பைத் தருவதில்லை.

உதாரணமாக விதி வசத்தால் தீராத நோய், கடன், வழக்கு, எதிரிகள் தொல்லை, திருமணத்தடை, சந்தான பாக்கியத் தாமதம், உறவுகளில் பிரிவு, வேலையின்மை - தொழில் முடக்கம் போன்றவற்றால் அல்லறும் வேளையில் மனம் பாதிப்புற்று செய்வதறியாது வாழ்வே சூன்யமாய் தோன்றும். இச்சமயங்ககளில் முதலில் செய்ய வேண்டியது. தங்களை சுற்றி நாலு நல்லவர்களாவது நேர்மறை சிந்தனையோடு அருகில் இருந்து வழிகாட்டிட வேண்டியது அவசியமாகும். எல்லோர்க்கும் நல்ல குரு எளிதில் அமைந்து விடுவதில்லை. ஆனால் நம்மை சுற்றி உள்ளவர்களை தேர்ந்தெடுக்கும் உரிமையும், கடமையும் நம்மைச் சார்ந்ததாகும். இதுவே நேர்மறை சக்தியை பெற மிகச் சிறந்த வழியாகும். இதன் மூலம் இக்கட்டான சூழ்நிலைகளிலும், நல்ல முடிவுகளை எடுத்து எந்த ஒரு பிரச்சனைக்கும் எளிதில் தீர்வு கண்டு விடலாம்.

ஆயினும் முன்வினைப் பயனால் சில தீர்க்க முடியாத, பிறப்பிலே வரும் வியாதிகள், அங்க குறைபாடுகள், மூளை வளர்ச்சியின்மை போன்றவற்றுக்கு தீர்வு காண முடியாமல் போனலும் கூட, அந்நிலையில் பலஹீனத்தையே பலமாக இறை சக்தியால் மாற்றி, எதிர் கொள்வதால் மட்டும் தான் வாழ முடியும். அந்த இடத்தில் நிம்மதியாக வாழ்வது ஒன்று தான் பிரதானமாகும். ஆனால் தினசரி வாழ்வில் வரும் நோய்கள் ஆத்ம சக்தி குறையும் போது தான் வருகிறது. இதை மனோசக்தியால் தான் போக்கிட முடியும் நமது மனம் சமநிலை தவறும் வேளையில்தான் தன் நம்பிக்கை இழந்து, இறை நம்பிக்கையும் குறைந்து, எதிர்மறை எண்ணங்களால் ஈர்க்கப்படுகிறோம். இதுவே நோய் காலங்களில் மருந்துண்ட போதும் பயத்தின் விளைவால் பல நோய்கள் தொடரக் காரணமாகிறது. நோயை பற்றிய தீவிர சிந்தனை குணமாகுவதை தடுத்து மேலும் நோயைத் தீவிரப்படுத்துகிறது. எனவே நோயைப் பற்றிய சிந்தனையை தவிர்த்து ஆரோக்கியத்தை மட்டுமே சிந்திக்க வேண்டும். மனோசக்தியால் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி கூடுகிறது, நோய் குணமாகிறது என்பது அறிவியலாரின் ஆராய்ச்சி ஆதாரமாகும்.

இது தொடர்பான செய்திகள் :