சித்தர்கள் ஜீவசமாதி இரகசியங்கள்

Home

shadow

        எல்லையில்லா இப்பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை சக்திகளும் மனித மனதிற்கு உட்பட்டது தான¢ உண்மையில் மனமே சுவாசம் மூலம் சூட்சுமமாய் எல்லாக் கர்மாவையும் இயக்கி "விதியாகிறது" மனதின் ஆற்றலுக்கு முன், பஞ்ச பூதங்களும், நவகிரகங்களும் கூட தலை வணங்கும். மனோசக்தி உள்ளவனை எந்த ஏவல், பில்லி, சூன்யம், செய்வினை, என எதுவும் நெருங்க முடியாது.

முதன் முதலில் இந்த இரகசியத்தை அறிந்துக் கொண்ட "சித்தர்கள்"பரம்பொருளான இறைவனை பஞ்சப்பூத ஆராதனைகள் மூலம் வழிப்பட்டனர். இப்பிரபஞ்சத்தில் முதலில் தோன்றியது ஆகாயம், அதை தொடர்ந்து காற்று, பின் நெருப்பு - நீர் இறுதியில் நிலம் என்பதை உணர்த்தும் வகையில் "நமசிவய" என பஞ்சாட்சரத்தை மந்திரமாய் பிரயோகித்து "ந"-மண், "ம"-நீர், "சி"-நெருப்பு, "வ" காற்று, இறுதியில் ஆன்மா ஒடுங்கும் இடமான "ய" ஆகாயமாய் இருப்பதை அறிந்து அனுதினமும் வணங்கி வந்தனர்.

அண்டத்தில் இருக்கும் இப்பூதங்களே சூட்சுமத்தில் இயங்கும் பிண்டங்களையும் ஆட்டுவிக்கின்றன. பஞ்ச பூதங்களில் ஆகாயம், நெருப்பு, நீர், நிலம் என நான்கு பூதங்களையும் இயக்கும் சக்தி காற்றாகும். காற்று, இல்லாவிட்டால் மற்ற பூதங்களால் தனித்து செயல்பட முடியாது என்பதை சித்தர்கள் உறுதி செய்தனர். எனவே சுவாசமான "காற்று" ஒடுங்கினால் "மனம்" ஒடுங்கும் ஐம்புலன்களும் அடங்கும் எனும் சூட்சுமத்தை உலகோர் அறிய தெரியப்படுத்தினர்.

சித்தர்கள் சுவாசத்தை ஒடுக்கும் முயற்சியில், பயிற்சிகளை மேற்கொண்டு வரும் வேளையில், உடலில் அதீத உஷ்ணம் உண்டானது. அதீத உஷ்ணத்தால் ஏற்பட்ட பஞ்சபூத வித்தியாசத்தால் உடலை எண்ணிலடங்கா பிணிகள் சிதைத்தது. இப்பிணிகளை நீக்கி, உடலை பேணி, உயிரை காக்க வேண்டிய காலக்கட்டாயத்தால், உடலை பலப்படுத்தும் உபாயங்களைத் தேடி, உலகம் முழுவதும் அலைந்து திரிந்தனர். இறுதியில் சித்தர்கள் அனைவரும்  தஞ்சம் அடைந்த பூமிதான் குமரிக் கண்டமான இன்றைய தமிழகம்.

சித்தர்கள் ஜீவசமாதி இரகசியம்:

இயற்கை எழில் கொஞ்சும் தென்னாட்டில் திரும்பிய திசையெங்கும் விரும்பிய, எண்ணற்ற மூலிகைகள், வானுயர மலைகளாய் இருப்பதை கண்ட சித்தர்கள் மட்டற்ற மகிழ்ச்சியுற்றனர். உயிர் காக்கும் மூலிகைகளால் உடல் பிணிப் போக்கி மரணமில்லாப் பெருவாழ்வையும் பெற்றனர்.

உடல் பலமானது, சுவாசமும் கட்டுப்பட்டது. அஷ்ட கர்மம், அஷ்டாங்க யோகம், அஷ்டமா சித்து யாவும் சித்தியாகிட, முக்தி அடைந்து ஒளி தேகமும் தரித்தனர். கூடுவிட்டு கூடு பாய்ந்தனர். ஈரோழு பதினான்கு உலகையும் காணும் ஞானமும், பிரபஞ்ச இரகசியங்களையும், நவக்கிரக இயக்கத்தையும், அறிந்து ஆராய்ந்து அதை மாற்றி அமைக்கும் சக்தியையும் பெற்றனர். முடிவாக கர்மாவை தீர்க்கும் சக்தி, விதியை மாற்றும் யுக்தி "மனம்" தான் என்றனர். மனமே இறைவன் - மனமே குரு என்னும் ஞானத்தை யாவரும் அடைய விரும்பிய சித்தர்கள் தங்கள் அனுபவங்களை எல்லாம் மறைப் பொருளாய் மானுடம் தழைக்க "மணி-மந்திர-ஒளஷதமாய் ஏட்டில் வடித்தனர்.

சித்தர்கள் தங்கள் சித்தத்தால் அறியப் பெற்றது தான் உடலின் 96 தத்துவங்களாகும். மேலும் விதியானது கர்மாவால் மட்டுமே நிச்சயக்கப்படுகிறது. எல்லோராலும் ஒளி தேகத்தை அடைந்திட முடியாது. எனவே விதியை மாற்றும் பரிகாரங்கள், பலன் தர வேண்டுமாயின் புலனடக்கமும், சுய ஒழுக்கமும் கொண்டு ஆற்றும் நித்திய கடமைகளாலும், சந்தர்ப்ப சூழ்நிலைகளை புரிந்து தெளிவாய் நடப்பதினாலும் மட்டுமே சாத்தியமாகும். பஞ்ச பூதங்களே கர்மாவுக்கு காரணமாகி புலன்களை ஆட்டிவிப்பதால் மனிதர்களின் மனம், உடல் பலப்பட்டு உயிர் காக்கப்பட பஞ்ச பூதங்களின் சமன் நிலையின் முக்கியத்துவத்தை உணர்ந்து சித்தர்கள் ஜீவ சமாதி அடைந்தனர்.

சித்தர்கள் தங்கள் ஞானத்தால் உணர்ந்த பிரபஞ்ச சக்தியின் ஆற்றலுக்கு பலவிதமான காரண ரூபங்களும், உள்ளுணர்ந்த அனுபவ வடிவங்களும் தந்து "இறைவன்" எனப் போற்றி வழிபட்டனர். இறுதியில் சித்தி அடைந்த இடங்களிலே கற்ப தேகத்தை ஜீவசமாதி அடையச் செய்து ஒளி தேகத்தை சூட்சுமமாய் பரம்பொருளோடு கலந்தனர். இயற்கையோடு இயற்கையாக கலந்த சித்தர்கள் இறைவனாகவே எங்கும் நிறைந்து என்றும் நிலைத்தனர். அப்படி சக்தி மிகுந்த சித்தர்களின் ஜீவசமாதிகள் தான் பின்னாளில் ஆலயங்களாக மாற்றப்பட்டு, சித்தர்கள் வணங்கி, தொழுது பரம்பொருளை இறைவனாய் ஸ்தாபித்து கோயிலென பெயரிட்டு அனைவரும் வந்து வணங்கிட உருவாக்கப்பட்டது தான் ஆலயங்களின் வரலாறாகும்.

மனிதர்களின் மனம் மாற்றம் தான் மிகச் சிறந்த "பரிகாரம்" என உணர்ந்த சித்தர்கள் ஜீவ சமாதி அடைந்தது தூய காற்றோட்டம் நிறைந்த அமைதியான இடங்களாகும். அவை அடர்ந்த மூலிகை காடுகள் உச்சி மலைகளில், தூய நீரோட்டம் உள்ள அருவி, ஆற்றங்கரை, கடற்கரை ஓரங்களாகும். ஏனைய பஞ்ச பூதங்களை சூட்சுமத்தில் இயக்கும் காற்றை தூய்மை நிறைந்த இடங்களில் சுவாசிக்கும் போது உடல் ஆரோக்கியமாகிறது மனம் தெளிவடைகிறது. இதுவே விதியை மாற்றும் சூட்சுமம், ஆலயங்களின் இரகசியம். உண்மையில் பிறப்பதும், வாழ்வதும், இறப்பதும், கர்மாவை இயக்குவதும், ஜென்ம வாசனையாய் நிலைப்பதும் "மனமே" ஆகும். மனோசக்தி பிரபஞ்ச சக்தியை காட்டிலும் விஞ்சியது. மனோ வேகம் ஒலி ஒளி வேகத்தையும் மிஞ்சியது.

இத்தனை சக்தி மிகுந்த மனதை ஒருமுகப்படுத்துவதன் மூலம் பிரபஞ்ச ஆற்றல் வெளிப்படுகிறது. ஆலய வழிபாடு என்ற பெயரில், தங்கள் துயரங்களையும், விதியையும் மாற்றிட தரிசிக்க பக்தர்கள் வரும் வேளையில் காடு மலை ஏறி, காற்றில் நிறைந்த மூலிகை வாசத்தை சுவாசித்து, கால் கடுக்க நடந்து வருவதாலும், தூய நீர் நிலைகளான அருவி, ஆறு, கடலில் குளிப்பதால் ஏற்படும் புத்துணர்ச்சியாலும் சுவாசம் ஒடுங்கிட, மனமும் ஒடுங்குகிறது. தனிமையில் அமைதியாக இருப்பதால் சிந்தனை தெளிவாகிறது. ஆரோக்கியமும், மனத் தெளிவும் கிடைத்த பின் எடுக்கும் முடிவுகள் நேர்மறை எண்ணங்களால் வலுப்பெற்று தன்னம்பிக்கை பிறக்கிறது, விதியும் மாறுகிறது இதுவே சித்தர்கள் ஜீவசமாதியான ஆலயங்களில் "பரிகாரம்" பலன் தரும் அதிசயமாகும்.

இது தொடர்பான செய்திகள் :