ஜென்ம இரகசியம் மறைவு ஸ்தனாங்களின் மர்மங்கள்

Home

shadow


        வினைகளுக்கு காரகம் வகிக்கும் செவ்வாயின் மறைமுக இரகசிய செயல்களை குறிக்கும் 8ஆம் பாவமே ஆயுள் ஸ்தானமாகும். ஆயுள் என்பது இப்பிறவியில் அனுபவிக்க வேண்டிய பிராரப்த கர்மாவை பற்றியதாகும். ஒருவருக்கும் தெரியாமல் மனம் மறைமுகமாக (8 ஆமிட நீச்ச சந்திரன்) செய்த முப்பிறவி பாவச் செயல்களின் கர்ம வினைப் பலன்களையே விதியென 8ஆமிடம் வழங்குகிறது. இதை அனுபவித்தே தீர்க்க முடியும். வேறு வழி கிடையாது. மனமே புத்தியை கொண்டு (முயற்சி - 3, சூழ்ச்சி - 6) வினைக்கு வித்திடுகிறது. மனமே மோட்சத்திற்கு முயன்று இறைவனை அடைகிறது. மனமே அர்த்த, காம திரிகோணங்களின் (2,3,6,7,10,11) வடிவில் பாவங்களைச் செய்து பலன்களை அனுபவிக்கிறது. மனமே மாயையின் ஆசை வலையில் சிக்குண்டு அறியாமையால் அஞ்ஞான இருளில் மூழ்கி சுய நலத்தால் அநியாய, அதர்ம, அக்கிரம காரியங்களில் ஈடுபட்டு 8ஆமிடமான மருள் ஸ்தானத்தில் நீச்சமடைகிறது எங்கு மனம் (சந்திரன்) நீச்சமாகி மறைந்து பாவங்கள் புரிகிறதோ அங்கு (கால புருஷ 8ஆமிடம்) தான் சாயா கிரகங்களான இராகு, கேது உச்சமடைகின்றனர். இதுவே விதியின் சூட்சுமமாகும்.

பிராரப்த கர்ம வினைப் பலன்களை அனுபவமாய் வாழ்வில் வழங்குவது 8ஆம் இடமாகும். ஆனால் இலக்கினத்திற்கு 6ஆம் வீடே இப்பிறவியில் முப்பிறவி வினைகளுக்கு எதிர்வினையாற்றி விதியை முடிவு செய்கின்றது. மகாபாரதத்தில் கிருஷ்ணரின் 6ஆமிட சூழ்ச்சி அதர்மத்தால் அனைத்தும் இழந்த பாண்டவர்களுக்கு தர்மம் நிலை நாட்டப்பட்டு மீண்டும் யாவும் கிடைக்கச் செய்தது. ஆனால் கூடவே இருந்து குடிகெடுத்து குழி பறித்த சகுனியின் 6ஆமிட சூழ்ச்சி உண்மையில் நல்லவனாய் சாதாரண தேரோட்டி மகனுக்கும் (கர்ணன்) நாடே கொடுக்கும் குணம் கொண்டவனாய் இருந்த துரியோதனின் மனதில் நயவஞ்சகமாய் நஞ்சை விதைத்து தவறாய் வழி நடத்தி பாவங்கள் பல புரிய தூண்டி 8ஆமிட துர்பலனை அனுபவிக்க வைத்தது.

விதி வினையாகும் போது நிழலாய் உடன் இருந்து தக்க நேரத்தில் மிகச்சரியான ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழங்கி, பாதுகாத்து உதவி வரும், நல்லவர்களையும், நலன் விரும்பிகளையும் தான் முதலில் விரோதித்து பிரிக்க வைக்கும். செஞ்சோற்று கடன் என்ற பெயரில் ஆயிரம் பேர் துரியோதனின் பாவத்திற்கு துணை போனாலும் தர்மத்தை மூச்சாய் சுவாசிக்கும் "விதுரர்" ஒருவர் மட்டும் தனித்து நின்று துரியோதனை தடுத்து பார்த்தார் கேட்கவில்லை என்றதும் பிரிந்து சென்றார். இன்றும் பகவத்கீதைக்கு இணையான ஒரு நூல் உண்டென்றால் அது "விதுரநீதி" மட்டுமே எந்த சூழ்நிலையிலும் நல்லவராய் வாழ்பவர்கள் முப்பிறவி கர்மாவால் சோதனைகளும் வேதனைகளும் அடைந்தாலும் இப்பிறவியில் செய்யும் புண்ணியங்கள் அவர்களின் சந்ததிகளை வாழ வைக்கும் சந்தோஷம் வீட்டில் என்றும் நிலைக்கும்.

ருணம் என்றால் கடன் என்று அர்த்தமாகும். இது இன்று பணத்தை மட்டுமே குறிக்கிறது. ஆனால் உண்மையில் ரிஷிகள் ஜோதிடத்தை வரையறுத்த காலத்தில் ருணம் என்பதை பாவ புண்ணிய கர்ம கடனாக பொருள் கொண்டனர். ஒருவருக்கு செய்த, செய்கின்ற பாவங்கள் யாவும் முதலில் ரோகமாய் தாக்கி, நல் வழிபடுத்த காலம் முயற்சிக்கிறது. மனதாலும், உடலாலும் செய்யும் 6ஆமிட கர்ம வினைகளே நோயாய் வந்து பின் தவறை உணர சந்தர்ப்பம் அளித்து திருந்தி வாழ வைக்கிறது. ஆயினும் மற்றவர்களை சூழ்ச்சி செய்து வீழ்த்திய வினைப் பயன், எதிர்வினையாக சத்ருக்கள் (எதிரிகள்) உருவாகி காலம் கை விடும் போது கர்மவினைகள் விதியாய் விளையாடி எதிரிகள் கை ஓங்குகிறது. பிறருக்கு செய்த பாவமே எதிர் வினையால் துன்பத்தை தருகிறது. இதுவே ருண, ரோக, சத்ரு சூழ்ச்சி வெற்றி பாவமான 6 ஆமிட சூட்சமாகும்.

ஒருவர் செய்த கர்மங்களை (10ஆம் பாவம்) இலாபமாக (11ஆம் பாவம்) தருபவர் சனி பகவான். சஞ்சித கர்மாவில் இருந்து பிறவி எடுக்கும் மனிதன் இப்பிறவியில் கட்டாயம் அனுபவித்தே ஆக வேண்டியவற்றை கால புருஷ 11ஆம் பாவத்திற்கு கர்ம பாவமான 10ஆம் இடம் 8ஆம் பாவம் ஆயுளாக நிர்ணயிக்கிறது. ஆனால் காலபுருஷ 8ஆம் பாவத்திற்கு இலாப பாவமான 6ஆம் வீடே ஒருவர் இப்பிறவியில் செய்யும் வினைகளுக்கு எதிர் வினையாக ருண, ரோக, சத்ருக்கள் உருவாக காரணமாகி விதியை அனுபவிக்க வைக்கிறது. பாவ, புண்ணியங்கள் இருக்கும் வரை பிறவிகளும் தொடரும் எனவே தான் காலபுருஷ 11ஆம் பாவத்திற்கு விருத்தி பாவமான 12ஆம் வீடான மோட்சத்தை அடையும் வரை கர்மங்களுக்கு உரிய பலன்களை 6,8,12ஆம் வீடுகள் மூலம் ஆயுளைத் (8ஆம் பாவம்) தந்து பிராப்த கர்மாவிற்கு ஆகாமிய கர்மாவை எதிர் வினையாக செய்ய வைத்து ருண, ரோக, சத்ருக்கள் (6ஆம் பாவம்) உருவாகிட மோட்சம் (12ஆம் பாவம்) கிட்டாமல் தடைப்பட பிறவிகளை சனிபகவான் (11/2) நீளச் செய்கிறார். அடுத்து விஞ்ஞானத்தின் மூலம் மெய் ஞானத்தின் வழியே சனிபகவானை பற்றி ஆராயலாம்.

கர்ம வினைகளைத் தீர்க்கும் பரிகாரத் திருத்தலங்களில் பரிகாரங்கள் எத்தனை செய்தும் பலன் கிட்டவில்லை என பரிதவிப்பவர்களும், காலம் கடந்தும் நல்ல வாழ்க்கைத் துணை அமையவில்லை எனத் திருமணத்தடையால் மனம் நொந்தவர்களும் சென்னை திருவொற்றியூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வடிவுடையம்மன் சமேத ஸ்ரீ தியாகராஜ- ஆதிபுரீஷ்வரரை 9 பௌணர்மிகள் தொடர்ந்து தரிசித்து வந்தால் திருமணம் உடனே நடக்கும். இல்வாழ்வு நல்வாழ்வாய் அமையும். இக்கோயிலுள்ள பசு மடத்திற்கு வெள்ளிகிழமைகளில் வரும் இராகு காலத்தில் அங்குள்ள பசுக்களுக்கு முடிந்தளவு வாழைப்பழம் தந்து, தொழுவத்தை சுத்தம் செய்து பராமரித்தால் நாட்பட்ட நோய்களும் குணமாகி ஆரோக்கியம் சீராகும். இங்குள்ள 27 நட்சத்தர சிவ லிங்கங்கள் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். உங்கள் ஜென்ம நட்சத்திரத்தன்று உங்களுக்குரிய நட்சத்திர சிவலிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்து உங்கள் கையால் பஞ்சமுக நெய் விளக்கேற்றினால் தீராத கடனும் தீரும் வாழ்க்கைத் தரம் உயரும். பதினாறு பேறும் கிட்டும். இறைவன் அருள் என்றென்றும் துணை நிற்கும். 

இது தொடர்பான செய்திகள் :