பக்தி கிரியா ஞான யோக இரகசியம்

Home

shadow


       மாயையால் சூழப்பட்ட மனிதப் பிறப்பின் இரகசியம் தன்னை அறிதலில் தான் மறைந்துள்ளது. நீ எதை எண்ணுகிறாயோ அதுவாகிறாய் எதை தேடுகிறாயோ அதை கிடைக்கப் பெறுவாய் - கீதையின் வாக்கு. மாறுப்பட்ட மனிதர்களின் வேறுப்பட்ட தேடுதல்களும், தேவைகளும் தான் தனிப்பட்ட ஒவ்வொருவரின் கர்மாவுக்கு மூல காரணமாகிறது. விதிக்கும் வித்தாகிறது. ஆதி காலத்தில் வாழ்ந்தவர்கள் இறைவனை அடைவது ஒன்றையே தங்கள் வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டிருந்தனர்.

அறிவால் அறிய முடியாத இறை சக்தியை மாபெரும் தவத்தாலும், யோகத்தாலும், ஒருமுகப்படுத்ததப்பட்ட மனதாலும் கண்டுணர்ந்த தவசீலர்களின் இறை அனுபூதி தான் வேதங்கள். உபநிஷத்துக்கள், புராணங்கள், இதிகாசங்கள், மற்றும் சாஸ்திரங்களாகும். விதியை மாற்றும் சூட்சுமங்களை எல்லோரும் உணரும் வகையில் காப்பியங்கள், ஆகமங்கள், திருமுறைகள், திவ்ய பிரபந்தங்கள் மூலமாக விரிவாக விளக்கி அடியார்களின் வாழ்க்கை வரலாறு என வரையறுத்தனர். மனித குலம் இறைவனை சுயமாய் அனுபவத்தில் அறிய எண்ணிய முன்னோர்கள் வேதத்தில் உள்ளவற்றை தான் உபநிஷத்துக்கள், புராண இதிகாச கதைகளாக எளிமைபடுத்தி¢ வாழ்வின் ஒழுக்கங்களையும் கர்மாவின் விளைவுகளையும் மனதின் ஆற்றலையும் எடுத்துரைத்தனர்.

சத்தியத்தின் வலிமையை தர்மத்தின் சக்தியை, நியாயத்தின் தீர்ப்பை நல்லோர்க்கு வழங்கி நீதியை நிலை நாட்டிட ஆண்டவனே மனித ரூபத்தில் வந்து, அவதாரப் புருஷராய் பூமியில் பிறந்து அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டினார். வாழ்வில் ஏற்படும் துன்பங்களை எல்லாம் உண்மையுடன் உறுதியாய் எதிர் கொண்டு தர்மத்தின் வழி சென்று இறைவனை சரணடைந்தால் முன் செய்த கர்ம பலன்கள் கூட தீரும். விதியும் மாறும் என்னும் தத்துவங்களை நன்நெறிகளாக இறைவனுடன் தொடர்பு படுத்தி கர்மாவின் இரகசியத்தை போதிப்பது தான் Òசனாதன தர்மத்தின்Ó நோக்கமாகும்.

தூய பக்தியும், அசைக்க முடியாத நம்பிக்கையும் நல்ல மனமும் தான் இன்றளவும் இறைவனை காணும் பாக்கியத்தை தந்தருள்கிறது. பல ஜென்ம கர்மாவை அனுபவிக்கும் போது ஏற்படும் சோதனைகளும், போராட்ட மன வேதனைகளும் தான் தவமாய் மாறி வரமாய் இறைவனிடம் கொண்டு சேர்கிறது.  இது இரு கண்களையும் இழந்த கண்ணப்பர் முதல் பிள்ளையை பறிக்கொடுத்த வேளையிலும் திருநாவுக்கரசருக்கு அறுசுவை விருந்து படைத்த அப்பூதி அடிகள் வரை இறைவனால் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே ஆட்கொள்ளப்பட்டனர் என்பதை நாயன்மார்கள், ஆழ்வார்கள் வாழ்க்கை வரலாற்றின் வாயிலாக அறிய முடிகிறது. மேலும் அருணகிரியார் தொடங்கி கச்சியப்பர், ஞானவரோதயர், குணசீலர், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், குமரகுருபரர், சிதம்பர சுவாமிகள், பாம்பனடிகள் வரை இறைவனை அடைந்திட உதவியது "பக்தி" தான் என்பதும் விதியை மாற்றும் யுக்தியும் பக்திதான் என்பதும் தெளிவாகிறது.

பிராரப்த கர்மாவை மாற்றும் பக்தியோகம்:

ச்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ

ஸ்மரணம் பாத ஸேவனம்

அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம்

ஸக்யம் ஆத்ம நிவேதனம்"

பக்தி என்பது எண்ணத்தால் சுடர்வதாகும். புலன்களின் ஒடுக்கத்தில் ஓங்கி நிலைப்பதாகும். இறைவனின் திருநாமத்தை அனுதினமும் தொடர்ந்து கேட்டு, துதித்து, திருவடியை பற்றி, நினைத்து, வணங்கி, தொழுது, பூஜித்து, அர்சித்து - தாசனாய் தொண்டாற்றி, போற்றி, மனம் ஒன்றி லயத்து சரணடைவது தான் பக்தியாகும். பக்தி மார்க்கம் தான் ஒருவரின் மனதை தூய்மைப்படுத்தி, கர்மாவை ஒழுங்குப்படுத்தி விதியை மாற்றும் எளிய மார்க்கமாகும்.

சஞ்சீத கர்மாவை வேரறுக்கும் கிரியா யோகம்:

ஒலி ஒளியான இறைவனை இடைவிடாது ஒரே நிலையில் உடலுள் காண்பதே கிரியா யோகம். இது மனம், புக்தி, உடலை சுவாசம் மூலம் ஒன்று சேர்க்கும் யோகமாகும். இதை முறையாக குரு மூலமாக தொடர்ந்து பயிற்சி செய்தவர்கள் தான் பின்னர் தங்கள் சித்த வலிமையால் முயற்சியின் பயனால் எல்லாவிதமான கர்மாவையும் வேரறுத்து பிறவியில்லா பெருநிலையை அடைந்தார்கள். இக்கிரியா யோகத்தை பல நிலைகளில் அனுபவங்களாக பெற்றவர்கள் தான் ரிஷிகள், சித்தர்கள், ஞானிகள், முனிவர்கள், யோகிகள் துறவிகள் ஆகும். இதில் முழுமை பெற்றவர்களால் தான் ஒளி உடலை பெற முடியும். உலகின் முதல் கிரியா யோகி Òசிவபெருமானாகும்Ó.

நிஷ்காமிய கர்மாவை நிலைக்கச் செய்யும் ஞானயோகம்

முப்பிறவியில் செய்த கர்ம வினைப்பயன்களை மாற்றுவதும், இல்லாமல் செய்வதையும் விட, ஒருவர் எத்தனை பெரிய பாவியானாலும், தனது தவறை உணர்ந்து திருந்தி விட்டால் இறைவனை எளிதில் அடையும் தகுதியை பெற முடியும் என்பதை உணர்த்துவதே ஞான யோகம். (உதாரணம் - அருணகிரியார்) ஞானம் என்பது குருவின் மூலம் திருவருளை பெறும் பாக்கியமாகும். ஞானம் அடைந்தவர்கள் ஆற்றும் கர்மாகவே நிஷ்காமிய கர்மா ஆகும். இது பலாபலன்களை பாராது, தன்னலம் நோக்காது, நல்லோர்க்கு நலம் சேர்க்க ஆற்றும் கர்மாவாகும். இதன் மூலம் ஞானமான இறைவனை அடையலாம் ஞானத்தால் முக்காலமும் உணர்ந்தவர்களால் தான் நிஷ்காமிய கர்மாவை ஆற்ற முடியும் மற்றவர்களின் விதியையும் மாற்ற முடியும். உதாரணம் திருமயிலையில் திருஞானசம்மந்தரால் திருமுறை பாடல் பாடியதும் இறந்து சாம்பலான பூம்பாவை மீண்டும் உயிர்த்தெழுந்தது. கலியுகத்தில் பஞ்சமகா பாவங்கள் புரிந்தவர்களையும் இரட்சித்து ஞானம் அருளி ஆட் கொண்டு நிஷ்காமிய கர்மாவை ஆற்றப் பணிக்கும் கருணைக் கடவுள், சித்தர்கள் கூட்டத்தின் தலைவர் Òதிருமுருகப் பெருமானேÓ உலகின் முதல் "ஞானயோகி"

இது தொடர்பான செய்திகள் :