பரம இரகசியம் --- விதியை வெல்லும் சூட்சுமம்

Home

shadow


         அன்றாட வாழ்வில் ஏற்படும் இன்பத் துன்பங்களை அனுபவிப்பது உடலே ஆகும். உடலானது பூமிக்கு வரும் நேரத்தில் உடல்காரகனான சந்திரன் வானில் எந்த நட்சத்திர சாரத்தில் உள்ளாரோ, அதுவே "ஜென்ம நட்சத்திரமாகும்." அந்நொடி முதல் பிராரப்த கர்மா, இலக்கினத்தை மையமாகக் கொண்டு தசா புத்தியாக நன்மை தீமைக்கு அடிகோலிடுகிறது.

ஆத்மகாரகனாக சூரியன் உடலோடு கொண்டுள்ள தொடர்பு உடலுள் இருக்கும் வரை மட்டும் தான். மண்ணிற்கு உடல் வடிவம் எடுத்து வரும் மனிதர்கள் உடல்காரகனால் (சந்திரன்) தான் அடையாளம் காணப்படுகிறார்கள். ஆகவே தான் ஜென்ம நட்சத்திரதன்று பிறந்தநாள் கொண்டாடி மகிழ்கிறோம். விதி முடிந்து ஆத்மா உடலை விட்டு வெளியேறும் போது உடல்காரகனான சந்திரனுக்கும் ஆத்மகாரகனான சூரியனுக்கும் ஓர் இடைவெளி பிரிவு ஏற்படுகிறது. அந்த தூரத்தையே திதியாக, இறந்த நாளாக, முன்னோர்களை வணங்கி தர்ப்பணம் தருகிறோம். பிறப்பிற்கும் இறப்பிற்கும் உள்ள காரண காரியத்தை வானியல் சாஸ்திரம் மூலமாக ஜோதிடத்தை கற்பித்த மெய் ஞானத்தின் முன் விஞ்ஞானம் தலை வணங்கியே ஆக வேண்டும்.

உலகில் நிலைத்திருப்பது ஒன்றே ஒன்று மட்டும் தான். அதுவே இயற்கையான பரம்பொருளாகும். ஒன்றிலிருந்து (சிவம்), இரண்டாகி (சிவசக்தி) மூன்றாகி (பிரம்மா - விஷ்ணு, ருத்ரன்) பலவாகி (ஜீவன்கள்) உருமாறி பின் இறுதியில் (பிரளயத்தில்) ஒன்றுள்ளே அடங்கி, அவ்வொன்றும் உருவமற்று அருவமாய் இருப்பதால் தான் மாயையான சக்தி "சர்வம் சிவமயம்" என சிவத்திடம் ஒடுங்கி விரிகிறாள். சிவமே ஸ்தூலமாகவும் சூட்சுமமாகவும் சக்தியுள் நிறைந்திருப்பவர். சூட்சுமத்தில் ஆத்மாகவும், ஸ்தூலத்தில் உயிராகவும் இருக்கும் "சிவம்" மாயா சக்தியான மனதாலே ஆட்டிவிக்கப்படுகிறார்.

சிவசக்தியான மெய்பொருள் (உயிருடல்) உலகம் முழுவதும் காணும் யாவிலும் நிறைந்த இருந்தாலும் அவற்றின் வடிவங்கள் - உருவங்கள் மட்டும் நிலையில்லாமல் மாற்றம் காண்பவை ஆகும். சூட்சும சிவமான ஆத்மா உடலை விட்டு பிரிந்து மரணம் நேர்ந்த போதிலும் ஸ்தூல சிவமான உயிர் பழைய உடலிலேயே தங்கி இருந்து புது உடலைப் பெற்று வாழ்கிறது. அதாவது சவமான தேகத்தை எரித்தாலும் புதைத்தாலும் உடலுள் இருக்கும் ஸ்தூல சிவமான உயிர் புழுவாகவும் (ஈறறிவு) சாம்பலாகி தாவரத்திற்கு (ஓரறிவு) எருவாகவும் புது உடல் பெற்று உயிர் வாழவேச் செய்கிறது. எந்நிலையிலும் உயிரும் உடலுமான சிவசக்தி பிரிவதில்லை. வடிவத்தில் மட்டுமே மாற்றங்கள் நிகழ்கிறது. ஆனால் இவற்றை இயக்கும் ஆத்மாவும் மனமும் ஜென்ம வாசனையால் பரிணாமத்தில் மேல் நோக்கி மட்டுமே பயணிப்பவை என்பதால் பரமாத்வோடு இணையும் முயற்சியில் ஈடுபட்டு கர்ம வினைப்பலன்களை அனுபவிக்கிறது.

விதியை வெல்லும் சூத்திரம்

எல்லோர் வாழ்விலும் முற்பிறவி கர்மா, பெற்றோர்கள் கர்மா மற்றும் இப்பிறவி கர்மா என மூன்றும் இணைவது தான் "விதியாகும்." பிராரப்த கர்மாவுக்கு எதிர்வினையாக ஆகாமிய கர்மா புரியும் போது தான் விதியால் செயலாற்ற முடியும். இராமாயணத்தில் சீதா பிராட்டி மானினை கண்டது பிராரப்த கர்மாவாகும். ஆனால் கண்டதும் ஆசைக் கொண்டு இராமரும், உடனே ஓடிச் சென்று துரத்தி அம்மானை கொன்றது யாவும் ஆகாமிய கர்மாவின் வினையால் விளைந்த விபரீதமாகும்.

விதியின் போக்கை மாற்ற திருத்த அல்லது வெல்ல சத்தியத்தாலும் இறைவனிடம் சரண் அடைவதாலும் மட்டுமே சாத்தியமாகும். அயோத்தியை ஆண்ட அரிச்சந்திர மஹா இராஜாவை சனி பகவான் பீடிக்கும் காலத்தில் விஸ்வாமித்திரர் வசிஷ்டரிடம் சென்று உண்மை மட்டுமே பேசும் அரிச்சந்திரனை பொய் உரைக்க வைக்கிறேன் என சபதம் செய்து சோதிக்க முற்பட்டார். நாடிழந்து, வீடிழந்து, மனைவி மக்கள் சுகமிழந்து அனைத்தையும் துறந்து இறுதியில் வெட்டியானாய் இடுகாட்டில் நின்றபோதும் "சத்தியமே ஜெயம்" என்று மெய்யன்றி வேறொன்றும் அறியேன் என துன்பங்கள், துக்கங்கள் ஆயிரம் சூழ்ந்த போதும் அரிச்சந்திரன் இவையாவும் தனது பிராரப்த கர்ம வினையென அனுபவித்து தீர்த்தாரே அன்றி தன்னிலைப் பாட்டில் இருந்து துளியும் மாறவில்லை. அதுவே பின்னர், இழந்த அனைத்தையும் பெற்றுத் தந்தது. இறை அருளையும் நிறையச் செய்தது.

வாழ்வில் விதி துரத்துகிறது என்பவர்கள் முதலில் வருந்துவதை நிறுத்தி விட்டு அமைதியாக இறை உணர்வுடன் வருவதை சந்தியுங்கள். கடமையைச் செய்யுங்கள், உங்கள் எண்ணங்கள் நிச்சயம் நனவாகும். நம்புங்கள், நடப்பது யாவும் உங்களுக்கு சாதகமாக மாறும். பொறுமை காத்திருங்கள் காலம் கைக்கொடுக்கும் சத்தியமும் செய்த தான தர்மமும் இறையருளாய் என்றும் துணை நிற்கும்.

இது தொடர்பான செய்திகள் :