பரிகார இரகசியங்கள் பலன் தரும் சூட்சுமங்கள்

Home

shadow

 

பேரண்டமான இப்பிரபஞ்சத்தையே 12 இராசிகளாக்கி அதில் 27 நட்சத்திரங்கள், 108 பாதங்களுடன் நவக்கிரகங்களின் இராஜாங்கத்தை கண்டறிந்த நமது சப்த ரிஷிகளின் பேரறிவுக்கும், பெருஞ்ஞானத்திற்கும் எட்டியவை யாவிலும் சிறு துளி கூட நம்மால் அறிய முடிவதில்லை என்பதே உண்மையாகும்.

விதியை மதியால் வெல்ல முடியுமா? என்னும் கேள்விக்கு பதில் முட்டை முந்தியதா, கோழி முந்தியதா என்பதாகும். முட்டை தான் முந்தியது என்னும் ஞானம் உணர முடிவது என்பது பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் அணுவின் மாற்றங்களில், சேர்க்கையினால் ஒன்றின் முட்டையே பின் கோழியாய் வடிவெடுத்திருக்கும் என்பது போல மதியால் விதி வெல்லப்படுவதும் விதியேயாகும்.

மார்கண்டயர், அபிராம பட்டர்பூம்பாவை இவர்களது விதி மாற்றப்பட்ட போதும், அரிச்சந்திரன், நளமகராஜா, இராமபிரான் "மன்மதன்", எமன் மற்றும் காயத்ரி மந்திர கிருஷ்டி கர்தா "ராஜரிஷி" விஷ்வாமித்ரர் மகரிஷி உட்பட யாவரும் விதியின் விசைக்கு விளையாட்டு பொம்மைகளே என்பதுதான் புராணங்களில் புலப்படுவதாகும்.

நியூட்டனின் மூன்றாவது விதிப்படி வினைக்கு எதிர்வினை உண்டு என்றால் பழைய கர்மாவின் தொகுப்பான சஞ்சீதத்தில் பிறவி எடுத்து பிராரப்த கர்மவை எதிர்கொள்ளும் வேளையில் ஆற்றும் கர்மாவான காமிய, ஆகாமிய கர்மாவால் ஏற்படும் பலன்களே "பரிகாரம்" எனப்படும். ஒரு செயலின் பின் விளைவை குறிப்பதே பரிகாரமாகும். அச்செயலானது செய்யப்படும் காலநேரமே அதன் பலனை தீர்மானிக்கிறது. இது காலதேச வர்த்தமான மாறுதலுக்கு உட்பட்டது. பரிகாரம் செய்யப்படும் போது "மனம், புத்தி, சித்தம், வாக்கு, காயத்தின் பங்கே பலனுக்கு பிரதானமாய் விளங்குகின்றது. இதுவே பரிகாரத்தின் அடிப்படை விதியாகும்.

பொதுவாக எல்லோரும் பரிகாரத்தை குடையுடனும் விதியை மழையுடனும் ஒப்பிடுவர். ஆனால் திரு.மிஸ்டிக் ஐயா அவர்கள் "சிவபராக்கிரமம்" என்னும் நூலில் பரிகாரம் என்பது நிச்சயம் பலன் அளிக்கிறது என்பதை தனது அனுபவத்தின் ஆதாரமாய் உறுதியாய் அறுதியிட்ட விளக்கியுள்ளார்.

பரிகாரம் மொத்தம் மூன்று வகைப்படும், அவை,

1. ஆலயப் பரிகாரம்

2. மந்திர ஜெபப் பரிகாரம்

3. யந்திர, தந்திர, அருட்சாதனப் பரிகாரம்

இம்மூன்றை விடவே தலைசிறந்த பரிகாரமும் ஒன்று உண்டு. அது தாய் தந்தையரை அந்திமாகாலம் வரை சகல சௌக்கியத்துடன், சந்தோஷமாக ஆதரவாய் உறுதுணையாய் பார்த்துக் கொள்வதாகும். இது சகல தோஷ சாப பாபத்திலிருந்தும் நிவர்த்தி தரும் என்பது பேருண்மையாகும். இனி ஆலய பரிகாரத்தைப் பற்றி விரிவாக பார்ப்போம்.

ஆலயப் பரிகாரம்: ஆலயப் பரிகாரங்களைப் பற்றி முழுவதும் அறிந்துக் கொள்ளும் முன்பு தோஷ, சாபங்கள் ஏற்படும் காரணத்தை அறிவுப் பூர்வமாக அறிந்திடுவோம்.

தோஷம் என்றால் ஏதோ ஒருகுறை என்பதே சரியான அர்த்தமாகும். பாப  கிரகங்களான சூரியன், செவ்வாய், சனி, இராகு, கேது எந்த ஸ்தானத்திலும் ஒன்றுக்கு மேற்பட்ட கூட்டுச் சேர்க்கை பெற்றாலும் அது அந்த ஸ்தானத்திற்கு உண்டான பாதிப்பை தரவே செய்யும். ஆயினும் 6,10,11ஆம் இடங்களில் பல பாவகிரகங்கள் ஒன்று சேர்ந்து அமரும் பொழுது நேரடி பாதிப்பு பெரிய அளவில் இருப்பதில்லை.

2,7,8ஆம் இடங்களில் பாப கிரகங்கள்  அமரும் பொழுது அதீத தோஷத்தையும் 4,5,12இல் சற்று குறைந்த தோஷத்தையும் தருகிறது. 1,3,9ஆம் இடங்களில் இருந்தால், ஆதிபத்திய, காரக உறவுகளுக்கு தீவிர தோஷத்தை ஏற்படுத்துகிறது. சுபகிரக பார்வை இருந்தால் தோஷத்தின் அளவு குறையும்.

தோஷம் உள்ள ஜாதகர்க்கு வாழ்வில் சாதாரணமாய் கிடைக்க வேண்டியவை கூட அனுபவிக்க வேண்டிய வயதில், தகுந்த காலத்தில் கிடைக்காமலோ அல்லது பெரும் காலத் தாமதத்திற்கு பின்தான் அடைந்திடவே முடியும். திருப்தியற்ற வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு பழகிடச் செய்வதே தோஷத்தின் பணியாகும். அந்தந்த பாவங்களில் (ஸ்தானம்) ஏற்படும் தோஷம் கிரகங்கள் மூலம் வெளிப்படும்போது கிரகங்களின் காரகங்கள் பெரிதும் பாதிப்புற்று தோஷங்கள் நிவர்த்தி அடையாமல் தலைமுறை தலைமுறையாயத் தொடர்கிறது. உதாரணம் பித்ரு தோஷம்

சாபம் என்பதை நோயுடன் ஒப்பிடலாம். மனித மனம் எந்த குறையையும் எளிதில் ஏற்றுக் கொள்ளப் பழகிவிடும். ஆனால் நோய் மட்டும் வந்துவிட்டால் தீர்வைத் தேடி, மருந்துக்காக ஓடி, குணம் நாடி நிவர்த்திக் கண்டிடும்.

எந்த கிரகமானாலும் அந்த கிரகம், இரண்டு குரூர கிரகங்களால் பார்க்கப்பட்டாலோ அல்லது ஒரு குரூர கிரகம் பார்வை பட இன்னொரு குரூர கிரகம் சேர்க்கைப் பெற இந்த பார்வை, சேர்க்கையால் இணைந்து பாதிப்புறும் கிரகமானது சாபத்தை தரும்.

தோஷங்கள் பாவரீதியில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் சாபங்கள் கிரகங்கள் மூலம் மட்டுமே வெளிப்படும். தோஷத்தால் முதலில் பாதிப்படைவது ஆதிபத்தியமே. ஆனால் சாபங்கள் காரகங்களை பாதிப்படையச் செய்து ஜாதகர்க்கு என்றும் துன்பத்தை தரும். ஆயினும் சாபங்களை விட தோஷங்களே ஒருவர் செய்த கர்ம வினைகளை கண்ணாடியிட்டுக் காட்டும்.

 நாளை ஜாதகத்தில் கர்மவினைகளை கண்டறியும் சூட்சுமத்தை காண்போம்

பரிகார இரகசியங்கள் தொடரும்.....

இது தொடர்பான செய்திகள் :