பிரபஞ்ச சக்தி தெய்வ நிலை

Home

shadow

                 புத்தி - SUPER EGO

     விஞ்ஞான ஆராய்ச்சி: மனமானது இச்சைகளின் ஆழ்மனப் பதிவுகளாலும், புலன்களின் ஆதிக்கத்தாலும் தன் விருப்பங்களை, தன் இஷ்டம் போல நிறைவேற்றத் துடிக்கும், ஆனால் புத்தியானது சமுதாய ஒழுக்க நெறிமுறைகளை (MORAL VALUES) உணர்ந்து கடுமையான கட்டுபாடுகளை விதிக்கும். காலப்போக்கில் புத்தியானது மனிதனின் மனசாட்சியாக (CONSCIENCE) உள்ளிருந்து கட்டளைகளை பிறப்பித்து, புலன்களின் எல்லைகளை நிர்வகித்து, சமயங்களில் தண்டிக்கவும் செய்யும். அஃதாவது அலைபாயும் மனிதனின் புலன்கள் ஆலயத்தில் ஆண்டவனை வணங்காது அங்கு வரும் இளம் பெண்களை ரசித்தால், மனசாட்சியானது (புத்தி) குற்ற உணர்வை ஏற்படுத்தி, எண்ணிய காரியங்கள் தடைப்பட்டு, நடைபெறாமல் போகும் நேரத்தில் தான் செய்த பாவமே இதற்கு காரணம் என நினைத்து தன் தவறுக்கு பரிகாரமாய் விரதமிருப்பது, மொட்டை அடிப்பது, அங்க பிரதட்சணம் செய்வது வேல் குத்திக் கொள்வது என உடலை வருத்தும் செயல்களைச் செய்து, உள்ளமது விமோட்சனம் தேடும் நிலைக்கு புத்தியானது தள்ளும் என தனது ஆராய்ச்சியின் மூலம் ஒரு மனதுள் மூன்று மனங்களின் செயல்களை பிரித்தாய்ந்து மன நோயாளிகளை Dr.ப்ராய்ட் குணப்படுத்தினார்.

மெய்ஞான அனுபவம்: புத்திக்கு காரகரான புதன் எந்த கிரகத்துடன் கூடினாலும் அந்த கிரகத்தின் குணத்தையே பிரதிபளிக்கும். சூரியன், செவ்வாய், சனி, இராகு-கேதுவுடன் சேரும் போது பாவியாகவும், வளர்பிறை சந்திரன், சுக்கிரன், குருவுடன் இணைந்தால் சுபராகவும், விளங்கும். புத்தி எப்பொழுதும் சூழ்நிலை, சந்தர்பத்தை சாதகமாகப் பயன்படுத்தி, காரணங்களை கூறி தான் செய்யும், செயலை நியாயப்படுத்தும். மகாபாரதத்தில் சூழ்ச்சிவலை விரித்து, சூதாட சகுனி அழைத்தபோது சபலத்தில் சிக்கிய தர்மரின் மனம், புத்திக் கெட்டு, தான் விளையாடப் போவது கிருஷ்ணருக்கு தெரியகூடாது, அவர் வரவும் கூடாது என வேண்டி கடவுளுக்கே தடைவிதித்தது. பரமாத்மா பக்கத்தில் இருந்தால் வெற்றி நிச்சயம் என்று புத்திக்கு நன்றாகத் தெரியும். ஆயினும் மனதை சூழ்ந்த மாயை, புத்தியை இயங்கவிடாமல் தடுத்ததற்குக் காரணம் கெட்டவர்களான கௌரவர்கள் சபைக்கு சென்ற பாவமே ஆகும். நல்லவர்களோடு பழகினால் ஆத்மசக்தி மனோசக்தி பெற்று புத்தி நேர்மறை சிந்தனையுடன் சரியான முடிவை எடுக்கும். ஆனால் கெட்டவர்களின் சகவாசத்தை பெற்றால் காம, குரோத, லோப, மோக, மத, மாச்சரியத்தில் மூழ்கி எதிர்மறை சிந்தனையால் புத்தியானது பேதளிக்கும்.

ஆகாமிய கர்மா ஆதாரம்: குழந்தைப் பருவத்தில் ஆழ்மனப் பதிவுகளாக பாதிப்புகளை உண்டாக்கிய பெற்றோர்களின் கர்மாவும், வளர்ந்த பின் ஒருவர் தன் இஷ்டப்படி வாழ்ந்தால் கிடைத்த மோசமான அனுபவங்களும், மனதை நல்வழிபடுத்தி, செய்த தவறுகளை உணரச்செய்து, ஒரு கட்டத்தில் எல்லா முடிவுகளையும் புத்தியைக் கொண்டு, ஆராய்ந்து நன்மை - தீமைகளை அறிந்து இறை சிந்தனையுடன் வாழும் சூழ்நிலைக்கு தள்ளி பக்குவம் பெற, "காலம்" தான் பழக்குகிறது. முன் ஜென்ம கர்மாவை அனுபவிக்கும் போது ஏற்படும் துயரங்களை சமாளிக்க அழுது, புலம்பி ஆண்டவனை சரணடையும் மனம், புத்தியை நேர்வழி நடத்தி இப்பிறவியில் நல்லவராய் வாழச் செய்கிறது. ஆனால் இப்பிறவியில் செய்யும் பாவங்களை அனுபவிக்க பிள்ளைகளை தந்து, முன் செய்த வினைகளை ஞாபகப்படுத்திட, வினைப்பயனை பிள்ளைகளின் வாழ்க்கையாக கண்முன் நிறுத்துகிறது.

வாழும் காலத்தில் பெற்றோர்களுக்கு உணவளிக்காமல், அன்பாய், ஆறுதலாய் நாலு வார்த்தை பேசாமல், மறைந்த பின் காசி, கயா, இராமேஷ்வரம் சென்று எத்தனை முறை தர்பணம் கொடுத்தாலும் அடுத்த சந்ததியருக்கு ஏற்பட்டுள்ள பித்ரு தோஷமானது நிவர்த்தி அடைவதில்லை, மன நிறைவான வாழ்வும் அமைவதில்லை.

விதியை வெல்ல மதி தெளிவுற வேண்டும் மதி தெளிந்து புத்தி நேர்வழி நடக்க குருவின் அருள் அவசியமாகும். ஆலயம் தோறும் சென்று ஆண்டவனை பிராதித்து வருவது மனதுள் இருக்கும் இறைவனை காணாத வரைதான். "மனம் தான் குரு, மனம் தான் இறைவன், மனமே ஞானத்தின் திறவுகோல்" என்பதை உணர்ந்துவிட்டால் நல்லவர்களுக்காக விதியை எதிர்க்க இறைவனே ஓடி வருவான். அனுதினமும் இன்பத்தை வாரி வழங்குவான் என்பது சர்வநிச்சயமாகும். அடுத்து கர்மகாரகர்-ஆயுட்காரகர் ஆன சனி பகவானை பற்றி ஆராய்வோம்..... 

இது தொடர்பான செய்திகள் :