மெய்ஞான குரு விஞ்ஞான புதன்

Home

shadow


         மனித வாழ்வில் நாளும் நிகழும் அனைத்து இன்பத்துன்பங்களுக்கும் காரணமாக விளங்குவது "மனமே" ஆகும். எல்லா ஜீவராசிகளையும் விட, உயர்ந்த குணங்களோடு பரிணாமத்தில் உச்சம் கண்ட மனிதன் பகுத்தறிவால் பண்பட்டு, மனோ சக்தியால் பஞ்ச பூதத்தையும் இயக்கும் யுக்தி அறிந்தவன். சிந்தித்து செயலாற்றும் மனமானது, அறிவு எனும் "குரு" கிரகத்தாலும் புத்தி என்ற புதன் பலத்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தக்கவாறு ஆகாமிய கர்மா ஆற்ற காரணமாகிறது.

புதன்-குரு ஆகிய கிரகங்களில் எந்த கிரகம் பலம் பெற்று உள்ளதோ அல்லது இவ்விருவரில் யார் இலக்கினம்-இராசி மற்றும் அதன் அதிபதிகளின் தொடர்பை பெறுகிறதோ அது பொருத்தே ஒருவரின் மனமும் முடிவுகளை எடுக்கும் அவர் குணமும் வெளிப்படும். புதன் ஆதிகத்தில் செயல்படுபவர்கள் புத்திசாலியாகவும் (INTELLIGENT) குருவின் அருள் பெற்றவர்கள் அறிவாளியாகவும் (GENIUS) திகழ்வார்கள்.

அறிவு என்பது பரிணாமத்தின் வளர்ச்சியால், மூளைத்திறனாக வழிவழியாக முன்னோர்களிடம் இருந்து பரம்பரை-பரம்பரையாக, பாரம்பரியமாக, பிறக்கும் போதே ஒருவரின் ஆற்றலாக தனித்துவம் மிக்கத் திறமையாக தானே வெளிப்படும் உதாரணமாக தந்தைக்கு சிற்பகலையறிவு ஆற்றலாக இருந்தால் மகனுக்கும், இயற்கையிலே சிலை செய்யும் நுண்ணறிவு நுட்பமாய் இருக்கும்.

புத்தி என்பது ஆதார அடிப்படையில் தர்க ரீதிக்கு ஏற்றவாறு செயல்படும். இது இருக்கும் இடத்தை பொருத்து, கூடும் நபர்களை வைத்து வாழும் முறையால் அளவிடப்படும். மேலும் ஒரு விஷயத்தை பற்றி படிப்பதாலும் , கேட்டறிவதாலும் தொடர்ந்து சிந்திப்பதாலும் கிடைக்கப்பெறும் விளக்கங்களைக் கொண்டு ஒன்றோடு ஒன்றைத் தொடர்புபடுத்தி விரிவடைந்து புத்திக் கூர்மையானது பரிமளிக்கும்.

பொதுவாக பள்ளிகளில் படிப்பது என்பது, புத்திக் கூர்மையை வளர்ப்பதற்காகவும், ஞாபகத்திறனை மேம்படுத்துவதற்காகவும் தான் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் உண்மையான அறிவானது திறமையாய் வெளிப்படும் போதுதான் வாழ்வில் சாதிக்க முடிகிறது. 

சாதனைக்கும் படிப்புக்கும் துளியும் சம்மந்தம் இல்லை. மேலும் மெத்த படித்தவர்கள் கூட தங்களுக்கு விருப்பமான துறையில் தங்கள் அறிவுடன் பேரார்வமான உணர்ச்சியை (PASSION) இணைக்கும் போது தான் எதையும் சாதிக்க முடிகிறது. சாதனையாளர்கள் பலரும் படித்த படிப்புக்கும் செய்யும் வேலை-தொழிலுக்கும் சம்மந்தம் இல்லாமல் இருப்பதும், எழுத படிக்கத் தெரியாதவர்கள் கூட வெற்றியாளராக சரித்திரத்தில் இடம் பிடிப்பதற்கும் கற்றல் என்னும் புத்தியை விட அனுபவம் எனும் இயற்கை அறிவே பெரிதும் உதவுகிறது.

குருகுல கல்விமுறையில் ஒருவரின் தனித்திறமையை கண்டறிந்து அது சம்மந்தமான அறிவை மேலும் புகட்டி பலப்படுத்தியதால், அறிவுடன் புத்தியும் இணைந்து பிரகாசித்தனர், புத்தி என்னும் விஞ்ஞானிக்கு தேவை ஆதாரம் மட்டுமே. ஆனால் அறிவு என்ற ஞானி, தான் உள்ளுணர்ந்த அனுபவங்களைக் கொண்டு எந்த முடிவையும் எடுப்பார். விஞ்ஞானத்தால் முழுதும் காணமுடியாத அண்டத்தை, மிகத் துல்லியமாக மெய்ஞானி தனது உள்ளுணர்வால் 12 இராசிகளாக பிரித்து, அதில் 27 நட்சத்திரக் கூட்டத்தை அடைத்து நவகிரக தாக்கத்தை "ஜோதிட சாஸ்திரமாக" படைத்தான்.

நவீன விஞ்ஞான உலகத்திலும், மருத்துவத் துறையால் கைவிடப்பட்ட எத்தனையோ, நோய்களுக்கும் மருந்தாக  பரிகாரம்  என்ற பெயரில் ஆலய வழிபாட்டின் மூலம், சில விருட்சம் மூலிகையாக நிறைந்துள்ள ஸ்தலத்திற்கு இயற்கையான சூழ்நிலையில் குறிப்பிட்ட நாளில் தரிசித்து வருவதால், உடனே குணமடைவதை வைத்து, முன்னோர்களின் அறிவாற்றலை அறிய முடிகிறது. மேலும் புத்தி என்ற விஞ்ஞானி அறிவு எனும் மெய்ஞானியின் அனுபவத்தின் முன் பாடம் கற்கும் கட்டாயமும் ஏற்படுகிறது, இனி விஞ்ஞான உலகம் உளவியல் மூலம் விதியை எப்படி வரையறுக்கிறது என்பதை மெய்ஞானப் பார்வையில் பார்ப்போம்.

விஞ்ஞானத்தின் வளர்ச்சி விபரீதத்தின் தொடர்ச்சி:

மனித புத்தியின் அசாத்திய சக்தியால், புதிய கண்டுபிடிப்புகள் விஞ்ஞானத்தை உச்சம் தொடவைத்த போதும், மெல்லக் கொல்லும் கொடும் விஷமாகத்தான், மனிதர்கள் வாழ்வில் நல்லவை போல நுழைந்து, சுறுசுறுப்பாய், ஆரோக்கியமாய், இயங்கியவனை கூட சோம்பேறியாக்கி, இயந்திர வாழ்வுக்கு பழக்கப்படுத்தி, உடல் உழைப்பை குறைத்து, மன அசதிக்கு புதிய கண்டுபிடிப்புகள் ஆளாக்கியது என்றால் மிகையில்லை.

19ஆம் நூற்றாண்டு தான் விஞ்ஞான வளர்ச்சியின் பொற்காலமாகும் தினசரி வாழ்வில் அன்றாடம் இன்று எல்லோராலும் பெரிதும் உபயோகப்படுத்தப்படும் மின்சாரம், மின் விளக்கு தொலைபேசி, நிழற்படக் கருவி (CAMERA) என இன்னும் பல அரிய, புதிய கண்டுபிடிப்புகள் அறிமுகமாகி, வெளி உலக புழக்கத்திற்கு வந்தது. விஞ்ஞானத்தின் வியத்தகு தொழில்நுட்பம், நவீன இயந்திர சாதனங்களின் வருகை மனிதர்கள் வாழ்வில் மாபெரும் மாற்றத்தையும், அதிரடி தாக்கத்தையும் உண்டாக்கியது.

 இது மேற்கத்திய நாடுகளில் முன்னேற்றம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவுக்கும், தவறான வாழ்க்கை முறைக்கும் அச்சாரமாய் அமைந்தது. ஒழுக்கமற்ற நெறிதவறிய வாழ்க்கை வாழ, தனி மனித சுதந்திரம் என்ற வாதம் உறவுகளின் ஆணி வேரையே அசைத்து, குடும்ப அமைப்பை சீர்குலைத்தது. இது மேலைநாடுகளில் வளரும் சந்ததியரின் வாழ்வில் விரக்தியையும், தனிமை-வெறுமையையும் தந்தது. இதனால் பாதிக்கப்பட்ட இளைய சமுதாயம் மனம் சம்மந்தமான பிரச்சனைகளில் சிக்கி வெளிவரத் தெரியாமல் தீவிர மன நோயாளியாகினர்.

மருத்துவத்துறைக்கு சவாலாக இருந்த மனநோயின் ஆரம்பக்கட்டத்தில் இருந்தவர்களுக்கு கூட மருந்தாக தூக்க மாத்திரை மட்டுமே தொடக்க காலத்தில் பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு நிரந்தர தீர்வு காணும் விதமாக ஆராய்ச்சிகள், பலரும் மேற்கொண்டதின் விளைவாக மருத்துவர்கள் "உளவியல் நிபுணர்களாக" மாறி மருந்தில்லா மருத்துவமாக "ஆலோசனைகள்" (COUNSELLING) மூலம் குணப்படுத்தினர். மேலும் மனதின் செயல்பாடுகளை மும்முனை பரிமாண கோட்பாடாக (ID-EGO-SUPER EGO) வகுத்த நரம்பியல் நிபுணர் Dr.சிக்மண்ட் பிராய்ட் தனது சைக்கோ அனாலீஸஸ் (PSYCHO-ANALYSIS) சிகிச்சை மூலம் பெரும் புகழ்ப்பெற்று உலகின் "உளவியல் தந்தை" என அழைக்கப் பெற்றார். ஒரு மனதுள் மூன்று மனங்கள்  செயல்படுவதை கண்டறிந்த விஞ்ஞான ஆராய்சியை , மெய்ஞான அனுபவத்துடன் ஒப்பிட்டு, ஆகாமிய கர்மாவுக்கு ஆதாரமாய் இருப்பவற்றை அடுத்து ஆராயலாம்.

கர்ம வினை தீர்க்கும் பரிகாரத் திருத்தலங்களில் வாழ்வில் வெற்றி பெற உறுதுணையாக இருக்கும் காணிப்பாக்கம் ஸ்ரீவரசித்தி விநாயகப்பெருமானை தரிசிக்கலாம். ஆந்திர மாநிலம் சித்தூரில் குடிக்கொண்டுள்ள ஸ்ரீவரசித்தி விநாயகர் கேட்கும் வரங்களை கேட்ட உடனே வாரி வழங்கும் அருட் கருணை கொண்டவர். சுயம்பாக வீற்றிருக்கும் விநாயகப் பெருமானை, வாழ்வில் தோற்றுவிட்டோம், இனி வாழ்வே இல்லை என்று வருந்துபவர்கள் மற்றும் சூழ்ச்சியால், துரோகத்தால் பொருளாதார சரிவை சந்தித்தவர்கள் ஆலயம் வந்து ஒரு முறை மூலவர் முன் நின்று கண் கலங்கினால் உடனே வாழ்வில் மாற்றங்கள் நிகழ்வதை உணரமுடியும். பொய் சத்தியம் செய்து காரியம் சாதித்தவர்களை இப்பெருமான் மன்னிப்பதில்லை. ஸ்ரீ வரசித்தி விநாயகரை சுற்றி அமைந்துள்ள சிவன் மற்றும் பெருமாள் தனி கோவில்களையும் கண்டு திரும்புவோர் எண்ணங்கள் நல்லவற்றுக்காக எடுக்கும் முயற்சிகள் எல்லாம் உடனே நிறைவேறும் கண்ட கனவுகள் நினைவாகும், வாழ்க்கை வளமாகும் பொருளாதாரம் சீராகும்.

இது தொடர்பான செய்திகள் :