6 ஆமிடம் பரிகார சூட்சுமங்கள்

Home

shadow


        இன்று பலரும் சரியான வயதில் திருமணமாகாமல் தகுந்த இணை கிடைக்கவில்லை என காலம் தாழ்த்துகிறார்கள். திருமணத்தடை என்பது பொருளாதாரம், கலாச்சாரம், நாகரீகம் சார்ந்தே பெரும்பாலும் இருக்கிறது. அக்காலத்தில் வெறும் மனப் பொருத்தத்தால் முடிவான திருமணங்கள் முறிவுகளை சந்திக்கவில்லை. மாறாக விட்டுக் கொடுத்து வாழ்வதை புரிந்து, வாழ்ந்து, திருமண வாழ்வில் வெற்றிக் கண்டனர். ஆனால் இன்றைய சூழலில் நவநாகரீகமும் கலாச்சார தாக்கமும் பொருளாதாரத்தை முன்னிறுத்தி தற்போதைய தகுதி, நிலையை மட்டுமே கருத்தில் கொண்டு செய்யப்படும் திருமணங்கள் புரிதலுக்கு பதிலாக சமத்துவம் என்ற பெயரால் சண்டைகளும் சச்சரவுகளும் வாழ்வின் வசந்ததத்தை அனுபவிக்க விடாமல் தடுத்துவிடுகிறது. இங்கும் மனமே முக்கிய பங்கு வகிக்கிறது.

ஜாதகத்தில் தோஷ சாம்யம் பார்ப்தென்பது இருவரின் குறைகளையும் சமன் செய்வதாகும். இதன் மூலம் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ முடிகிறது. ஒரு அழகுள்ள பெண் தனக்கு சற்றும் பொருத்தமில்லா ஆடவரை மணந்து சந்தோஷமாய் வாழும் போது அந்த பெண்ணின் எத்தகைய தோஷமும் அடிபட்டு விடுகிறது. ஒரு ஆடம்பரமான பணக்கார ஆண் எளிமையான ஏழை வீட்டில் பெண் எடுப்பதன் மூலம் ஆணின் எந்த தீவிர தோஷமும் தவிடு பொடியாகி சம்சார சாகரம் சந்தோஷ சங்கீதமாகிறது. மொத்தத்தில் திருமணபந்தத்தில் இணைவோர்கள் எதிர்பார்ப்புகள் இன்றி இணைந்து, எதையும் மாற்றும் சக்தி மனதிற்கு உண்டு என்பதை உணர்ந்து, வாழ்ந்தால் வாழ்க்கையில் என்றும் வசந்தம் வீசும்.

ஒருவர் வாழ்வில் முன்னேற முனைப்பாக செயல்படும் போது தனது எண்ணங்களுக்கு எதிராக மற்றவர் வரும் போது எதிரிகள் உருவாகிறார்கள். எண்ணம் போல் வாழ்க்கை என எடுத்த காரியத்தில் தனது வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் தீய எண்ணம் உடையவர் தானே விலகும் சூழ்நிலைகள் உருவாகும். இதன் மூலம் அறிய வேண்டியது எதிர்ப்புகளை துச்சப்படுத்தி துணிவுடன் நல்லவராய் மட்டுமல்லாது சமயங்களில் வல்லவராகவும் வாழப் பழகுவதே எதிரிகளின் தாக்கத்தை  இல்லாமல் செய்யும் தந்திரமாகும். இதிலும் மனமே செயல்களின் முடிவுகளை நிச்சயிக்கிறது.

அடுத்தது கடன் பிரச்சனைகள், வேலையின்மை, தொழில் முடக்கம் என பலரும் அவதியுறுவதுயாகும் இவற்றை சரியாக திட்டமிடுதல், சிக்கனமாய் வாழ்தல், தன்னம்பிக்கையுடன் எதையும் எதிர் கொள்தல் மூலம் சமாளிக்கலாம். வேலையில்லாத ஒருவர் முதலில் கிடைத்த ஏதோ ஒரு வேலையில் பணியாற்றுவதன் மூலம் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லமுடியும். ஆங்கிலத்தில் " EXISTENCE IS ESSENTIAL FOR SUCCESS" என்பார்கள்.

தொழில் முடக்கத்தால் வருந்துபவர்கள் தற்போது செய்யும் தொழிலில் சாதகபாதக நிலையை ஆராய்ந்து சில மாற்றங்களை செய்து சிக்கனத்தை கடைபிடித்தால் முன்னேறலாம். தொழில் செய்பவர்களுக்கு நேரம் என்பது மிகவும் முக்கியம். எந்த சந்தர்ப்பத்தையும் தனது சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாற்றத் தெரிந்தவர் தொழிலில் நஷ்டமடைவதில்லை.

வாழ்வில் எல்லோரும் உணர வேண்டியது இன்றைய நிலையில் நமக்கு எது அத்தியாவசியம், அவசியம், அநாவசியம் என்பதே ஆகும். இதுவே வெற்றியின் சூட்சுமம். உணவு, உடை இருப்பிடம் மட்டும் தான் எந்த சூழ்நிலையிலும் எல்லோர்க்கும் அத்தியாவசியமானதாகும். ஆனால் அதே சமயத்தில் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் கணவனிடம் ரூ.20,000க்கு பட்டுப் புடவை மனைவி எதிர்ப்பார்ப்பது அநாவசியமாகும். ஆனால் இலட்ச ரூபாய் மாத வருவாய் உள்ளவர்க்கு அதே புடவை அவசியமாகிறது. இப்படி மனதால் புத்தியை கொண்டு சூழ்நிலை அறிந்து செயல்பவடுவதே வாழ்வில் வெற்றியைத் தரும்.

விதியை எவராலும் தடுக்க முடியாது ஆனால் நிச்சயம் மாற்றி அமைக்க முடியும். பற்றற்று பரம் பொருளான இறைவனிடம் சரண் அடைவதாலும், ஆத்மசக்தி கொண்ட குருவின் தொடர்பில் தொடர்ந்து இருப்பதாலும், மனோசக்தி நிறைந்த அனுபவசாலிகளின் வழிகாட்டுதல்படி நடப்பதாலும், இக்கட்டான நிலையிலும் பக்கபலமாய் இறுதிவரை உறுதுணையாய் இருக்கும் நலன்விரும்பிகளின் நட்பை பெறுவதாலும், விதியை மதியால் மாற்ற முடியும். இதனால் நேர்மறை எண்ணங்களும் தன்நம்பிக்கையும் நிறைந்து மனதை சரியான முடிவெடுக்க புத்தி தூண்டும். பிராப்த கர்மாவை பற்றிய கவலை வேண்டாம். ஏனெனில் அது முன்பு நாம் செய்த வினையால் வரும் விளைவுகள். ஆனால் மனதால் புரியும் ஆகாமிய கர்மா ஒன்று தான் விதியை மதியால் மாற்றி அதன் முடிவை நிச்சயிக்கும். இதைத்தான் எல்லா சாஸ்திரங்களும், புராணங்களும் இதிகாசங்களும் அறிவுறுத்துகிறது. இனி விஞ்ஞான உலகம் உளவியியல் ரீதியில் விதியை எப்படி அணுகுகிறது என்பதை மெய்ஞானத்துடன் ஒப்பிட்டு பார்ப்போம்.

கர்ம வினைத்தீர்க்கும் பரிகாரத் திருத்தலத்தில் குழம்பிய மனம் தெளிவான முடிவெடுக்கவும், பேதலித்த புக்தி நிதானமாய் செயல்படவும், சுய அறிவின்றி தடுமாற்றத்துடன் தடம் மாறிய சிந்தனையை நல்வழிப் படுத்திடவும், நற்றுணையாய், நாளும் நலம் புரியும் அற்புத ஸ்தலமான தலக்கோண ஸ்ரீசித்தேஷ்வரரை தரிசித்திடுவோம். ஆந்திர மாநிலம், திருப்பதியை அடுத்து தலக்கோணம் என்னும் கிராமத்தில் மலைக்காட்டின் நடுவே அருவிக்கரை அருகே இயற்கை எழில் கொஞ்சும் சூழ்நிலையில் அமைந்திருக்கும் இத்திருத்தலம் மிகவும் சக்தி வாய்ந்ததாகும். இங்கு இருக்கும் சிவபெருமானை மனமுறுகி ஒரு வாரம் பௌர்ணமி முன் வந்து தங்கி இருந்து அருவியில் குளித்து மனமாற தரிசித்திட எத்தனை பெரிய மனப் பிரச்சனையும், சித்தக் கோளாறும் தீரும். Òஎன் தலைவிதிÓ இது என மனம் நொந்துக் கிடப்பவர்கள் பௌர்ணமியில் தூய்மையான அமைதியான இயற்கை சூழ்நிலையில் வீற்றிருக்கும் ஸ்ரீசித்தேஷ்வரரை தரிசித்து திரும்பினால் நிச்சயம் மனம் தெளிவாகும். புத்தி நலமாகும் வாழ்வும் மாறும் இன்பம் சேரும். 

இது தொடர்பான செய்திகள் :