எம்.எல்.ஏ.க்களின்
போன் ஒட்டுகேட்பு விவகாரம் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்படும் என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில்
குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி கட்சிகள் 14 மாதங்கள் ஆட்சி செய்தது.
அப்போது காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா, ஜனதா தளம் ஆகிய கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்களின்
போன் ஒட்டு கேட்கப்பட்டதாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஆர்.அசோக் எம்.எல்.ஏ.
தொடர்ந்து குற்றம் சாட்டியிருந்தார். இந்த
நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. எச்.விஸ்வநாத் குமாரசாமி முதலமைச்சராக
இருந்தபோது பலரது போன் ஒட்டு கேட்கப்பட்டதாகவும், தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள்
17 பேரின் தொலைபேசியும் ஒட்டு கேட்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இந்த போன் ஒட்டு கேட்பு விவகாரம் குறித்து விசாரணை
நடத்த தலைமை செயலாளருடன் ஆலோசித்து முடிவு எடுப்பதாக ஏற்கனவே கர்நாட முதலமைச்சர் எடியூரப்பா
தெரிவித்திருந்தார். இந்நிலையில் இது குறித்து
பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர்
முந்தைய அரசில் எம்.எல்.ஏ.க்களின் போன் ஒட்டுகேட்கப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ்
கட்சியின் சட்டசபை தலைவர் உள்பட பல உறுப்பினர்களும் விசாரணை நடத்த வலியுறுத்தி உள்ளதாகவும் அதனால் இந்த விவகாரம் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தார். மேலும் பாரதிய ஜனதா கட்சியின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம்
இன்று நடைபெறாது எனவும் கர்நாடக அமைச்சரவை வருகிற 20 ஆம் தேதி விரிவாக்கம் செய்யப்படும்
என தெரிவித்தார்.