அடல் ஓய்வூதியத் திட்ட உயர்வு

Home

shadow


 

அடல் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியத்தை 5 ஆயிரம் ரூபாயில் இருந்து 10 ஆயிரமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டத்தில் சந்தாதாரராக இணையும் 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களுக்கு, 60 வயதுக்கு பின்பு 5 அடுக்குகளில் ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் வரை மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதற்கான திட்டம், 2015-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தற்போது ஒரு  கோடியே 2 லட்சம் பேர் சந்தாதாரர்கள் உள்ளனர். பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு காரணமாக இன்னும் 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தொகை போதுமானதாக இருக்காது என்பதால் இது குறித்து பரிசீலனை செய்யும்படி மத்திய அரசுக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து கோரிக்கைகள் வந்தன. இந்த நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓய்வூதிய நிதி கட்டுப்பாடு மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் ஹேமந்த் ஜி.கான்ட்ராக்டர், அதிகபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை 5 ஆயிரம் ரூபாயில் இருந்து 10 ஆயிரமாக உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறினார். இது தொடர்பான பரிந்துரை, நிதி அமைச்சசத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதேபோல் அடல் ஓய்வூதியத் திட்டத்தில் சேருவதற்கான வயது உச்சவரம்பும் 50 ஆக உயர்த்தப்பட உள்ளதாகவும் ஹேமந்த் குறிப்பிட்டார்.

இது தொடர்பான செய்திகள் :