ஆட்சி அமைப்பதற்கான பணிகளை தொடங்கியுள்ள பாஜக

Home

shadow

                 நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், பாஜக அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. இன்று மாலை நடைபெறும் பாஜக எம்பிக்கள் கூட்டத்தில் பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் தேர்வு செய்யப்படுகிறார். 

                 மக்களவைக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 350 தொகுதிகளை கைப்பற்றியது. பாஜக மட்டும் 303 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 

                  இந்த நிலையில், மத்திய அமைச்சரவையின் கடைசிக் கூட்டம் நேற்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், 16-வது மக்களவையை கலைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

                 இதனையடுத்து, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். அப்போது, மக்களவையை கலைப்பதற்கான தீர்மானத்தை அவர் வழங்கினார். மேலும், தனது ராஜினாமா கடித்ததையும், அமைச்சர்களின் ராஜினாமா கடிதங்களையும் குடியரசுத் தலைவரிடம் அவர் வழங்கினார். இதனை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், புதிய அரசு அமையும் வரை பிரதமராக நீடிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

                 இந்த சந்திப்பின் போது, மத்திய அமைச்சர்களும் உடன் இருந்தனர். அப்போது அவர்களுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரிவு உபச்சார விழா நடத்தப்பட்டது. இதில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவும் கலந்து கொண்டார். 
          மத்தியில் மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை பாஜக தொடங்கியுள்ளது. பாரதிய ஜனதா எம்பிக்கள் கூட்டம், டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. இதில் பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இதைத் தொடர்ந்து, அவர் குடியரசுத் தலைவரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

                   இந்த நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டமும் இன்று நடைபெறவுள்ளது. பாஜக தலைவர் அமித்ஷா தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில், மத்திய அமைச்சரவையில் இடம் ஒதுக்குவது குறித்து விவாதிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

இது தொடர்பான செய்திகள் :