ஆர்.கே.நகர் வாக்குப்பதிவு நிறைவு

Home

shadow

கடந்த முறை பணப்பட்டுவாடா புகார் காரணமாக  ரத்தான ஆர்.கே. நகர் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தல் இன்று நடைபெற்றது.  அ.தி.மு.க.வின் மதுசூதனன்,  தி.மு.க.வின் மருது கணேஷ், பாரதிய ஜனதா சார்பில் கரு.நாகராஜன், சுயேச்சை வேட்பாளராக  டி.டி.வி.தினகரன்  உட்பட 59 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.  தொகுதியில் அமைக்கப்பட்டிருந்த 258 வாக்குச்சாவடி மையங்களில், காலை 8 மணி முதலே வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து, தங்களது ஜனநாயகக் கடமையை ஆர்றினர். புது வண்ணாரப்பேட்டையில் உள்ள 77-ம் எண் வாக்குச்சாவடியில் மின்னணு வாக்கு எந்திரம் பழுதானதால் வாக்குப்பதிவு தாமதமானது. இதேபோல் செரின்நகரில் உள்ள 124வது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் 3 மணி நேரத்துக்கு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் புதிய வாக்குப்பதிவு இயந்திரம் வரவழைக்கப்பட்டு தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்றது.  தகவலறிந்து வாக்குச்சாவடிக்கு வந்த தேர்தல் நடத்தும் அதிகாரி கார்த்திகேயன், பொதுமக்கள் வாக்களிக்கும் முறையை நேரில் பார்வையிட்டார்.

நேதாஜி நகர் 1வது தெரு வாக்குச் சாவடியில் 200 மேற்பட்டோருக்கு வாக்காளர் பட்டியலில் பெயரில்லை எனக்கூறி வாக்களிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது.  இதனால் ஆவேசம் அடைந்த அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதேபோல்,  பார்த்தசாரதி நகர் வாக்குசாவடி பகுதியிலும் தங்களது பெயர்கள் வாக்களர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக புகார் தெரிவித்தனர். மற்றபடி அசம்பாவித சம்பவங்கள் ஏதுமின்றி அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

5 மணிக்கு முன்னதாக வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, 5 மணியைத் தாண்டிய பிறகும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். அனைத்து வாக்குச்சாவடி மையங்களும் பதற்றமானவையாக  அறிவிக்கப்பட்டிருந்ததால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 50 போலீசார் மற்றும் 15 துணை ராணுப்படையினர் நிலைநிறுத்தப்பட்டிருந்தனர். தொகுதி முழுவதும் சுமார் மூவாயிரத்து 500 போலீசாரும், ஆயிரத்து 500 துணை ராணுப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்தத் தேர்தலில், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்து கொள்வதற்கான ஒப்புகைச் சீட்டைப் பார்க்கும் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டது.   70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவானதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 24ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

இது தொடர்பான செய்திகள் :