இடைக்கால இயக்குநர் நாகேஸ்வரராவ் பிறப்பித்த பணியிடமாற்ற உத்தரவு அதிரடியாக ரத்து - அலோக் குமார் வர்மா

Home

shadow

                சிபிஐ இயக்குநராக மீண்டும் பொறுப்பேற்ற அலோக் குமார் வர்மா, இடைக்கால இயக்குநர் நாகேஸ்வரராவ் பிறப்பித்த பணியிடமாற்ற உத்தரவை அதிரடியாக ரத்து செய்துள்ளார்.


சிபிஐ இயக்குநர் அலோக் குமார் வர்மாவும், சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவும் சில மாதங்களுக்கு முன் ஒருவர் மீது ஒருவர் லஞ்சக் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இந்த மோதல் போக்கு உச்சகட்டத்தை எட்டியதை அடுத்து, இருவரும் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் சிபிஐ-யின் இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டார்.இதையடுத்து, தன்னை கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அலோக் குமார் வர்மா மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அலோக் குமார் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது. மேலும், அவர் கொள்கை முடிவுகள் எதையும் எடுக்கக் கூடாது; அன்றாட அலுவல்களை மட்டுமே கவனிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும் அலோக் குமாருக்கு முழு அதிகாரம் வழங்குவது தொடர்பாக, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய உயர்நிலைக் குழு ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. பிரதமர் மோடி தலைமையிலான உயர்நிலைக் குழு, நேற்று இரவு கூடி விவாதித்தது. எனினும், அந்தக் கூட்டத்தில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. முன்னதாக, அந்தக் கூட்டத்தில் தன்னால் உடனே பங்கேற்க இயலாது என்று மல்லிகார்ஜுன கார்கே கூறியிருந்தார். இந்நிலையில், சிபிஐ இயக்குநராக அலோக் குமார் வர்மா நேற்று மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார். 77 நாள்களுக்கு பிறகு டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்துக்கு வந்த அவர், தனது அலுவலகப் பணிகளை தொடர்ந்தார். மீண்டும் பணிக்குச் சேர்ந்த முதல் நாளிலேயே, 13 அதிகாரிகளை இடமாற்றம் செய்து இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவ் பிறப்பித்த உத்தரவுளை அலோக் குமார் வர்மா ரத்து செய்து விட்டதாக, மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :