இயற்கை வளங்களை பராமரிக்க தவறியதால் தண்ணீருக்காக பிற மாநிலங்களிடம் கையேந்தும் நிலை - சென்னை உயர் நீதிமன்றம் வேதனை

Home

shadow

தமிழகத்தில் அனைத்து வளங்கள் இருந்தும், அவற்றை முறையாக பராமரிக்கத் தவறியதால், தண்ணீருக்காக பிற மாநிலங்களிடம் கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் வி.பி.ஆர்.மேனன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், சென்னையில் உள்ள நீர்நிலைகளில் மழைநீரை சேமிக்கவும், மழைநீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்கவும் நீர் மேலாண்மைத் திட்டத்தை முறையாக அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.வேணுகோபால் மற்றும் எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.  வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், வெளிநாடுகளில் ஒரு திட்டத்தை செயல்படுத்தும் முன் அதன் சாதக, பாதகங்களை ஆராய்ந்த பிறகே திட்டங்களை முறையாக செயல்படுத்துவர் என்றும். ஆனால், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில், எந்தத் திட்டங்களையும் அதிகாரிகள் முறையாகச் செயல்படுத்துவதில்லை என்றும் விமர்சித்தனர். நீர்நிலைகளைப் பாதுகாத்து மழைநீரை சேமிக்காவிட்டால் எதிர்காலத் தலைமுறையின் வாழ்வாதாரத்துக்கே மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுவிடும் என குறிப்பிட்ட நிதிபதிகள் இதே நிலை நீடித்தால், கடலில் கூட தண்ணீர் இருக்காது என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். மேலும் சென்னையைச் சுற்றியுள்ள நீர்நிலைகளைத் தூர்வாரவும், மழைநீரைச் சேமிக்கவும், தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கவும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து, மார்ச் 18-ஆம் தேதிக்குள் சென்னை மாநகராட்சி, வருவாய்த் துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

இது தொடர்பான செய்திகள் :