கர்நாடக சட்டசபையில் வரும் 18ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு - சபாநாயகர்

Home

shadow

            கர்நாடக சட்டசபையில் வரும் 18ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு - சபாநாயகர்

           கர்நாடக சட்ட சபையில் வரும் 18ஆம் தேதி, அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என சபாநாயகர் ரமேஷ் குமார் அறிவித்துள்ளார்.

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து,  அந்த கூட்டணி கட்சியில் இருந்த 16 எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

இதனால் குமாரசாமி அரசு மெஜாரிட்டி பலத்தை இழந்து கவிழும் அபாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனிடையே, சபாநாயகர் ரமேஷ்குமார் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்காத நிலையில்,இதனை எதிர்த்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், கர்நாடக சட்டசபை இன்று கூடியது. அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பை உடனே நடத்தக்கோரி பாஜக எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

ஆனால் அதனை சபாநாயகர் ரமேஷ் குமார் ஏற்கவில்லை. எம்.எல்.ஏ.க்களின்  ராஜினாமா தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கிய பிறகே, நம்பிக்கை வாக்கெடுப்பு பற்றி முடிவு செய்வதாக கூறினார். எனவே, எம்.எல்.ஏ.க்களின் அமளி நீடித்தது. இதனால் சட்டசபை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், கர்நாடக சட்டசபையில் வரும்  18-ம் தேதி கர்நாடக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என சபாநாயகர் ரமேஷ் குமார் அறிவித்துள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :