கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதில் பாரதிய ஜனதா தீவிர முயற்சி

Home

shadow

கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதில் பாரதிய ஜனதா தீவிர முயற்சி மேற்கொண்டுவருகிறது

கர்நாடக சட்டப் பேரவையில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததை அடுத்து, குமாரசாமி முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார். சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தின் மீதான விவாதம்  நான்கு நாட்கள் நடைபெற்றதை தொடர்ந்து, நேற்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், குமாரசாமி தலைமையிலான அரசுக்கு 99 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே கிடைத்தது.  அரசுக்கு எதிராக 105 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். இதனால், 6 வாக்குகள் வித்தியாசத்தில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது. இதையடுத்து, குமாரசாமி தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் வஜுபாய் வாலாவிடம் அளித்தார். அந்த ராஜிநாமா கடிதத்தை ஏற்றுக்கொண்ட ஆளுநர், அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கும் வரை குமாரசாமியே இடைக்கால முதலமைச்சராக செயல்பட உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், கர்நாடக பாரதிய ஜனதா தலைவர் எடியூரப்பா பேட்டியளிக்கையில்,  பிரதமர் மோடி மற்றும் கட்சியின் தலைவர் அமித் ஷா ஆகியோருடன் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் அதன்பிறகு, ஆளுநரைச் சென்று சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.  இந்நிலையில், பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என காவல் ஆணையர்  அலோக் குமார் தெரிவித்துள்ளார். நேற்று முதல்  வரும் 25-ஆம் தேதி மாலை 6 மணி வரை 144 தடை அமலில் இருக்கும்.  அனைத்து மதுபானக் கடைகளையும், பார்களையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கர்நாடகாவில்  குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காத பகுஜன் சமாஜ்  கட்சி எம்.எல்.ஏ மகேஷை கட்சியிலிருந்து நீக்கி, அக்கட்சித் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், பாரதிய ஜனதா சார்ப்பில் முதலமைச்சர் ஆவதில்  முன்னாள்  முதலமைச்சர்களான எடியூரப்பா மற்றும் ஜெகதீஷ் ஷெட்டர் இடையே கடும் போட்டி நிலவுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன..  

இது தொடர்பான செய்திகள் :