காங். எம்.பி.க்கள் அமளியால் மாநிலங்களவையில் தடைபட்ட டெண்டுல்கரின் கன்னிப்பேச்சு

Home

shadow

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 15-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, பிரதமர் மோடி, பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ரகசியமாக சந்தித்து பேசியதாக குற்றம் சாட்டினார்.

 

இதற்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால், மாநிலங்களவை ஒரு நாள் கூட சுமூகமாக நடைபெறவில்லை. இவ்விவகாரத்தில் நேற்று பேசிய, சபாநாயகர் வெங்கையா நாயுடு, தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதை அவைக்குள் எடுத்து வராதீர்கள் என்றும், அவைக்குள் பிரதமர் எதுவும் பேசவில்லை என்பதால் யாரும் மன்னிப்பு கேட்க தேவையில்லை என்று கூறினார்.

 

இருப்பினும், இவ்விவகாரத்தில் பிரதமர் மோடி வருத்தம் தெரிவிக்க வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இன்று காலை அவை கூடியதும் இதே விவகாரம் வெடித்தது. இதனால், அவை மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது. 

 

மீண்டும் அவை கூடியதும், நியமன உறுப்பினரான கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை சபாநாயகர் பேச அழைத்தார். ஆனால், அவர் பேச எழுந்த போதிலிருந்தே காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷமிட்டனர். இதனால், அவரது பேச்சு தடைப்பட்டது. தொடர்ந்து கூச்சல், குழப்பம் நிலவியதால் அவை முழுவதுமாக ஒத்திவைக்கப்பட்டது.

 

இதற்கிடையே மற்றொரு எம்.பி.யான ஜெயா பச்சன் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசும் போது, “சச்சின் நாட்டுக்காக பெருமை சேர்த்தவர். அவரை பேச விடாமல் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று கூறினார்.

 

கடந்த 2012-ம் ஆண்டு நியமன எம்.பியாக பொறுப்பேற்ற சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட் தொடர்கள் காரணமாக அவை நடவடிக்கைகளில் அதிகமாக ஈடுபட்டது இல்லை. விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவர் கூட்டத்தொடர்களில் கலந்து கொள்வது இல்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான செய்திகள் :