சசிகலா மீது சுமத்தப்பட்ட களங்கம் துடைக்கப்பட்டு உள்ளது: புகழேந்தி பேட்டி

Home

shadow

டி.டி.வி.தினகரன் ஆதரவாளரும் கர்நாட மாநில அ.தி.மு.க. அம்மா அணி செயலாளருமான புகழேந்தி ஈரோட்டில் மாலைமலைர் நிருபரிடம் கூறியதாவது:-

அம்மா ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வீடியோ தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. இது வெற்றிவேலுவின் தனிப்பட்ட முயற்சி. இதில் எங்கள் துணை பொதுச்செயலாளர் தினகரனுக்கும் அந்த வீடியோவுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது.

மதுரையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் என்றாவது ஒருநாள் அம்மா சிகிச்சை பெறும் வீடியோ வெளியே வரும் என்று தெரிவித்தேன். அண்ணன் டி.டி.வி.தினகரனிடம் இதுபற்றி நான் கூறி அம்மா சிகிச்சை பெற்று வரும் வீடியோவை வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று கூறினேன். தினகரன் அவ்வாறு அம்மா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் வீடியோவை வெளியிட்டு மலிவான அரசியலை நடத்த வேண்டாம் என்று தெரிவித்தார்.

ஆகவே அண்ணன் தினகரனுக்கு அந்த வீடியோவுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. முழுக்க முழுக்க வெற்றிவேலுவின் தனிப்பட்ட முயற்சி இது.

அம்மாவை கொன்று விட்டார்கள், காலை வெட்டி விட்டார்கள் என்றெல்லாம் சின்னம்மா சசிகலா மீது பழியை போட்டார்கள். இப்போது இந்த வீடியோ வெளியிட்ட தன் மூலம் அம்மாவை சின்னம்மா சசிகலா கண்ணும் கருத்துமாக எப்படியெல்லாம் பார்த்துக் கொண்டார் என்பதற்கு சாட்சி ஆகும்.

இந்த வீடியோ மூலம் பழி போட்டவர்கள் எல்லாம் இப்போது வெட்கி தலைகுனிய வேண்டும். இப்போது தெளிவாகி உள்ளது. சின்னம்மா மீது சுமத்தப்பட்ட களங்கம் துடைக்கப்பட்டிருக்கிறது. சின்னம்மா சசிகலா மீது பொதுமக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கும் ஒரு மரியாதை ஏற்பட்டு இருக்கிறது.

இப்பவும் சொல்கிறேன் அம்மா சிகிச்சை பெற்ற வீடியோவுக்கும் தினகரனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

இவ்வாறு புகழேந்தி கூறினார்.

இது தொடர்பான செய்திகள் :