சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் மீண்டும் நியமனம்

Home

shadow

                       டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற உயர்நிலைக் குழு கூட்டத்தில் சிபிஐ இயக்குநர் அலோக் குமார் வர்மாவை இடமாற்றம் செய்ய அதிரடியாக முடிவெடுக்கப்பட்டது. சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

:நாட்டின் உயரிய விசாரணை அமைப்பான சிபிஐ-யில், இயக்குநர் அலோக் குமார் வர்மாவும், சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவும் சில மாதங்களுக்கு முன் ஒருவர் மீது ஒருவர் லஞ்சக் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இந்த மோதல் போக்கு உச்சகட்டத்தை எட்டியதை அடுத்து, இருவரும் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டனர். சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டார். தன்னை கட்டாய விடுப்பில் அனுப்பியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அலோக் குமார் வர்மா மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அவரைக் கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்து செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது. எனினும், அவர் கொள்கை முடிவுகள் எதையும் எடுக்கக் கூடாது; அன்றாட அலுவல்களை மட்டுமே கவனிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும், அலோக் குமார் வர்மாவுக்கு முழு அதிகாரம் வழங்குவது தொடர்பாக, பிரதமர் தலைமையிலான உயர்நிலைக் குழு ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து, சிபிஐ இயக்குநராக அலோக் வர்மா புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில், தில்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் அந்தக் குழு இரண்டாவது நாளாக வியாழக்கிழமை மாலை கூடி ஆலோசனை நடத்தியது.   கூட்டத்தில், அலோக் குமார் வர்மாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான முகாந்திரம் இருப்பதாக முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அவரை சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து நீக்குவதற்கு பிரதமர் மோடியும், நீதிபதி ஏ.கே.சிக்ரியும் முடிவு செய்தனர். இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :