தமிழகம், புதுச்சேரிக்கு நீட் விலக்கு இல்லை – மத்திய அரசு உறுதி

Home

shadow

             தமிழகம், புதுச்சேரிக்கு நீட் விலக்கு இல்லை – மத்திய அரசு உறுதி

             நீட் தேர்வில் இருந்து தமிழகம், புதுச்சேரிக்கு விலக்கு இல்லை என மத்திய மனிதவள அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.

‘நீட்’ தேர்வில் விலக்கு அளிக்க கோரி தமிழ்நாடு, புதுச்சேரி அரசுகள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளன. இந்த கோரிக்கைக்கு மத்திய அரசு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.

இந்த நிலையில், நீட் தேர்வில் இருந்து விலக்குகோரி தமிழ்நாடு, புதுச்சேரி அரசுகளிடம் இருந்து வரப்பெற்ற கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மக்களவையில், மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, மத்திய மனிதவள அமைச்சர் ரமேஷ் போக்ரியால் எழுத்துப் பூர்வமாக பதில் தாக்கல் செய்தார். அதில், இளநிலை, முதுகலை, மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் இருந்து தமிழகம், புதுச்சேரிக்கு விலக்கு அளிக்க கோரி இரு மாநில அரசுகளிடம் இருந்து கோரிக்கை வந்துள்ளது.

எனினும், இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் 1956 பிரிவு 10டி-யின் படி, மருத்துவ சேர்க்கைக்கான நீட் தேர்வை நடத்துவதற்கு பரிந்துரைக்கிறது. இச்சட்டத்தின் பிரிவுகள் மாநிலங்களுக்கு விலக்கும், தளர்வும் இன்றி நாடு முழுவதும் பொருந்துகிறது.

மேலும், நீட் தேர்வில் தேர்ச்சி அடையாமல் போனதற்காக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக எந்த தகவலும் இல்லை எனவும் பதில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :