தேர்தலுக்கு முந்தைய 2 தினங்களில் எந்தவொரு கட்சிக்கும் ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிர்வதை தடுக்க முடியாது

Home

shadow

                 தேர்தலுக்கு முந்தைய 2 தினங்களில் எந்தவொரு கட்சிக்கும் ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்படுவதைத் தடுக்க முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


யூ-டியூப், முகநூல், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தேர்தல் மற்றும் அரசியல் தொடர்புடைய கருத்துகளை தேர்தல் நடைபெறும் 2 தினங்களுக்கு முன்பு அரசியல்வாதிகள் அல்லது தனிநபர்கள் பகிர்வதை தடுக்க வேண்டும் என்று கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் பதில் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக, வழக்குரைஞர் பிரதீப் ராஜகோபால் ஆஜராகி முன்வைத்த வாதம்:
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 126ஆவது பிரிவு, தேர்தல் நடைபெறுவதற்கு 2 தினங்களுக்கு முன்பு, பொதுக் கூட்டங்கள், ஊர்வலம், பிரசாரம் ஆகியவற்றை அரசியல் கட்சிகள் நடத்துவதற்குத் தடை விதிக்கிறது. எனினும், தனிநபர்கள் தங்களுடைய சமூக வலைதள கணக்கில் தேர்தல் தொடர்புடைய கருத்துகளை வெளியிட்டால் அதை எவ்வாறு எங்களால் தடுக்க இயலும் என்ற வாதத்தை பிரதீப் ராஜகோபால் பதிவு செய்தார். பொது நல மனுவைத் தாக்கல் செய்தவர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளில் பணம் கொடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் விளம்பரங்கள் தீவிர ஆய்வுக்கு உள்படுத்தப்படும். அதுபோன்ற நடைமுறையை இந்தியாவிலும் பின்பற்றலாம் என்றார்.  இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த தலைமை நீதிபதி நரேஷ் பாட்டீல், நீதிபதி என்.எம்.ஜம்தார் ஆகியோர் அடங்கிய அமர்வு, சமூக வலைதளங்களில் தேர்தலுக்கு இரு தினங்களுக்கு முன்பு கட்சி மற்றும் அரசியல் சார்ந்த கருத்துகள் பகிரப்படுவதை ஒழுங்குப்படுத்துவதற்கான ஆலோசனைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று இருதரப்புக்கும் அறிவுறுத்தியது.

இது தொடர்பான செய்திகள் :