நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் - அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் அழைப்பு

Home

shadow

  

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் வரும் 11 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் அழைப்பு விடுத்துள்ளார்.


நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் வரும் 11 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மக்களவை சுமுகமாக நடைபெற உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்தும் நோக்கில், கூட்டத் தொடரின் முதல் நாளான டிசம்பர் 11 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுவதாக சுமித்ரா மகாஜன் அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசு பங்கேற்க இருக்கும் கடைசி முழு நீள கூட்டத்தொடர் இதுவாகும். அதனால் இந்தக் கூட்டத்தொடரைப் பயனுள்ளதாக மாற்ற பாரதிய ஜனதா திட்டமிட்டுள்ளது. அதே வேளையில், ஆளும் கட்சிக்கு கடுமையான நெருக்கடி அளிக்க எதிர்க்கட்சிகளுக்குக் கிடைத்துள்ள கடைசி வாய்ப்பு என்பதால், ரஃபேல் ஒப்பந்தம் உள்ளிட்ட பிரச்னைகளை அவையில் எதிர்க்கட்சிகள் எழுப்ப முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் நிலுவையில் இருக்கும் முத்தலாக் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயலும் என்று தெரிகிறது. முன்னதாக, அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அழைப்பு விடுத்திருந்தார். அந்தக் கூட்டம் அவருடைய இல்லத்தில் வரும் 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது. கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர்களில், பல்வேறு விவகாரங்களில் எதிர்க்கட்சிகளுக்கும், ஆளும் பாஜக கூட்டணிக்கும் ஒருமித்த கருத்து ஏற்படாத காரணத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. அதை சரிசெய்து அனைத்து கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்தும் வகையில் 3 அனைத்துக் கட்சி கூட்டங்கள் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

இது தொடர்பான செய்திகள் :