நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று முதல் இணையதளம் வாயிலாக வெளியீடு

Home

shadow

எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், தங்களது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை இன்று முதல் இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான  நீட் தேர்வு அடுத்த மாதம் 5-ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த நவம்பர் 1-ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதற்கிடையில் 25 வயதுக்கு மேற்பட்ட பொதுப் பிரிவு மாணவர்களும் நீட் தேர்வில் பங்கேற்கலாம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் டிசம்பர் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அந்த கால அவகாசத்துக்குள் நாடு முழுவதிலும் இருந்து 15 லட்சத்து 19 ஆயிரம் பேர் நீட் தேர்வில் பங்கேற்பதற்காக விண்ணப்பத்தைச் சமர்ப்பித்திருந்தனர். இந்நிலையில், விண்ணப்பித்தவர்களுக்கான ஹால்டிக்கெட்டுகள் இணையதளத்தில் இன்று வெளியிடப்படவுள்ளன. நீட் தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 5-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளன. நீட் தேர்வானது தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸாமி, வங்கம், உருது ஆகிய 11 மொழிகளில் நடைபெற உள்ளது. மேலும்  இந்த ஆண்டு தமிழில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான தேர்வு மையங்கள் அனைத்தும் தமிழகத்திலேயே அமைக்கப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான செய்திகள் :