பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

Home

shadow

அன்னியச் செலாவணி விதிமீறல் காரணமாக, பிசிசிஐ அமைப்பு மற்றும் அதன் நிர்வாகிகளுக்கு மொத்தம் 121 கோடி ரூபாய் அபராதம் விதித்து அமலாக்கத் துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இரண்டாவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் பாதுகாப்பு காரணம் கருதி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றன. அப்போது, தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துக்கு, பிசிசிஐ எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ரிசர்வ் வங்கியின் அனுமதியில்லாமல் 4 கோடியே 98 லட்சம் அமெரிக்க டாலரை பரிமாற்றம் செய்துள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் சுமார் 342 கோடி ரூபாயாகும். இந்த அளவுக்கான மிகப் பெரிய தொகையை ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமல் வெளிநாடுகளுக்கு பரிமாற்றம் செய்வது சட்டப்படி தவறாகும்.  இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 2011-ஆம் ஆண்டு நடவடிக்கைகளைத் தொடங்கிய அமலாக்கத் துறை, அப்போதைய பிசிசிஐ தலைவர் என். சீனிவாசன், ஐபிஎல் தலைவர் லலித் மோடி உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தியது. இதைத் தொடர்ந்து, கடந்த மே 31-ஆம் தேதி விசாரணையை நிறைவு செய்த அமலாக்கத் துறை, பிசிசிஐ அமைப்பு மற்றும் சீனிவாசன், லலித் மோடி உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு மொத்தம் 121 கோடி ரூபாய்  அபராதம் விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சீனிவாசன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.ராஜா, சீனிவாசன் தாக்கல் செய்த மனுவை நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் அமலாக்கத் துறை, அதன் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளுமாறும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :