போரா முஸ்லிம் சமுதாயத்தினர் நாட்டின் வளர்ச்சிக்கு மிகச் சிறந்த பங்காற்றி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு

Home

shadow

 

        இந்திய போரா முஸ்லிம் சமுதாயத்தினர், நாட்டின் வளர்ச்சிக்கு மிகச் சிறந்த பங்காற்றி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.


       ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த போரா முஸ்லிம் சமுதாயத்தினர் இந்தியாவில் கணிசமான எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர். 


    முகமது நபிகளின் பேரன் இமாம் ஹுசேனின் உயிர்த் தியாகத்தை நினைவுகூரும் மொஹர்ரம் பண்டிகையை, ஆஷாரா முபாரக் என்ற பெயரில் இப் பிரிவினர் அனுசரித்து வருகின்றனர். 


       இதனையொட்டி, மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள சைஃபீ மசூதியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். 


     நிகழ்ச்சியில் பேசியபோதுஅமைதிக்காகவும், நியாயத்துக்காகவும் இமாம் ஹுசேன் உயிர்த்தியாகம் செய்ததாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, அந்தக் காலத்தைவிட தற்காலத்தில்தான்  அவரது தியாக வரலாற்றை நினைவுகூருவது மிகவும் முக்கியமானது என்று தெரிவித்தார்.


     இமாம் ஹுசேனை மிகவும் நேசிக்கும் போரா முஸ்லிம் சமுதாயத்தினர், குஜராத் முதலமைச்சராகத் தான் பதவி வகித்தபோது தனக்கு மிகவும் உதவியதாக நினைவுகூர்ந்த பிரதமர், நாட்டின் வளர்ச்சிக்கு  போரா முஸ்லிம்கள் மிகச் சிறந்த பங்காற்றி வருவதாகவும் பாராட்டினார். 


    முன்னதாக இந்நிகழ்ச்சியில் பேசிய போரா முஸ்லிம் சமுதாய மதத் தலைவர் சையத்னா முஃபாதல் சைஃபுதீன், வரும் 17-ஆம் தேதி பிறந்தநாளைக் கொண்டாடவுள்ள பிரதமர் மோடிக்கு முன்கூட்டிய பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதாக குறிப்பிட்டதுடன், மோடி நீடூழி வாழ்ந்து நாட்டுக்கு மேலும் தொண்டாற்ற வேண்டும் என்றும் வாழ்த்தினார். 


    சுமார் ஒரு லட்சம் போரா முஸ்லிம்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

இது தொடர்பான செய்திகள் :