மத்தியில் பாரதிய ஜனதா அரசு மீண்டும் அமைந்தால் தமிழகத்தில் நதி நீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்

Home

shadow

மத்தியில் பாரதிய ஜனதா கட்சி. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் நதிநீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் எனவும் 60ஆயிரம் கோடி மதிப்பீட்டில் கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற அதிமுக கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய , மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தமிழகத்தை போலவே மகாராஷ்டிரம், கர்நாடகம், தெலங்கானா, சத்தீஸ்கர், ஆந்திரம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் நதிநீர் பிரச்னைகள் உள்ளதாகவும் கோதாவரி-காவிரி நதிகளை இணைப்பதன் மூலம் ஆந்திரம், தெலங்கானா, தமிழகம் ஆகிய மாநிலங்கள் நீர் வசதியை பெற முடியும் என தெரிவித்தார். மேலும் இதன் மூலம் நெடுங்காலமாக நிலவி வரும் நதிநீர் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும் என தெரிவித்த அவர் இத் திட்டத்துக்கு 60ஆயிரம் கோடி  ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு  திட்டம் தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார். மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டால், முதல் பணியாக கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி, தமிழகத்தின் நதிநீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண்போம் எனவும் இத் திட்டங்களைச் செயல்படுத்த அதிமுக, பாரதிய ஜனதா கட்சி கூட்டணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் , சேலம் - சென்னை இடையே 8 வழி பசுமை விரைவுச் சாலை திட்டத்துக்கு நீதிமன்றம் தற்போது தடை விதித்துள்ளதாகவும்  விவசாயிகளின் கருத்துகளைக் கேட்டு, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இத் திட்டத்தை சுமுகமாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்

இது தொடர்பான செய்திகள் :