முத்தலாக் மசோதா நிறைவேற்றம்

Home

shadow

இஸ்லாமியர் ஒருவர், தனது மனைவியை மும்முறை தலாக் என்று  கூறி விவாகரத்து செய்துவிடும் நடைமுறையால், முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படுவதும், அவர்களது உரிமைகள் நசுக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதனையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, முத்தலாக் தடைச் சட்டத்தை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. எந்த வகையிலும் முத்தலாக் கூறி விவாகரத்து செய்வது சட்டவிரோதம் என்றும் இதனை மீறுவோருக்கு 3 ஆண்டு சிறை என்றும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது. முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்ட மசோதா என்று  பெயரிடப்பட்டுள்ள இந்த மசோதாவைமத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். மசோதாவை அறிமுகப்படுத்திப் பேசிய அவர், இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாள் என்றார். முஸ்லிம் பெண்களுக்கான உரிமையைப் பாதுகாக்கவும், பாலின சமத்துவத்தை நிலைநாட்டவும் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். எந்த ஒரு மதம் அல்லது மதச்சடங்குகளோடும் இதனை தொடர்புபடுத்திப் பார்க்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார். மசோதா மீதான விவாதத்தில் முதலில் பேசிய அகில இந்திய மஜ்லிஸ் கட்சி எம்.பி.அசாதுதீன் ஒவைசி, முத்தலாக் தடைச் சட்ட மசோதா, அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் உள்ளதாக குற்றம் சாட்டினார். இது அரசியல் சாசனத்திற்கு எதிரான மசோதா என்று அ.தி.மு.. எம்.பி அன்வர் ராஜா எதிர்ப்புத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பேசிய மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்த மசோதாவைக் கொண்டு வருவதற்கு முன்பு, அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் கலந்துபேசி ஒருமித்த கருத்தை மத்திய அரசு ஏற்படுத்தவில்லை என்று குற்றம்சாட்டினார். இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தொடர்ந்து, பல்வேறு கட்சி உறுப்பினர்களும் மசோதா குறித்து தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர். ஒவைசி உள்ளிட்டோர் இந்த மசாதோவில் கொண்டுவந்த சில திருத்தங்கள், வாக்கெடுப்பு மூலம் நிராகரிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து முத்தலாக் சட்ட மசோதா, மக்களவையில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது

இது தொடர்பான செய்திகள் :