மேகதாதுவில் புதிய அணை கட்ட வேண்டியதன் அவசியம் குறித்து - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி

Home

shadow

 

     மேகதாதுவில் புதிய அணை கட்ட வேண்டியதன் அவசியம் குறித்து தமிழக முதலமைச்சர் மற்றும் அரசியல் கட்சித்தலைவர்களை நேரில் சந்தித்து விளக்க இருப்பதாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார்.

     கர்நாடகத்தில் கனமழை பெய்து வருவதால் முக்கிய அணைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன. கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து மொத்தமாக வினாடிக்கு 1 லட்சம் கன அடிக்கும் அதிகமாக உபரி நீர் தமிழகத்துக்குத் திறந்துவிடப்படுகிறது. இந்நிலையில் பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, ஒரு நாளைக்கு சராசரியாக 10 டி.எம்.சி தண்ணீர் தமிழகத்திற்குத் திறந்துவிடப்படுவதாகக் கூறினார். இந்த தண்ணீர் யாருக்கும் பயனின்றி வீணாகக் கடலில் கலப்பதாக அவர் குற்றம்சாட்டினார். அதனால் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு ஏற்கனவே முடிவு செய்துள்ளதாகக் கூறிய குமாரசாமி அதற்கு மத்திய அரசின் அனுமதிக்காகக் காத்திருப்பதாகத் தெரிவித்தார். நீர்ப்பாசனத்துறை, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகங்களிடம்  அனுமதி கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக ஓர் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டுமாறு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் கேட்டுள்ளதாக குமாரசாமி குறிப்பிட்டார். மேகதாதுவில் அணை கட்டுவதால் கர்நாடகத்தை விட தமிழகத்திற்கு தான் அதிக பயன் கிடைக்கும் எனக் கூறிய குமாரசாமி, தமிழக முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து இதுபற்றிப் பேசவிருப்பதாகத் தெரிவித்தார். தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து இதுபற்றி எடுத்துக்கூறத் தயாராக இருப்பதாகக் கூறிய குமாரசாமி இது தொடர்பாக அவர்களுக்கு கடிதம் எழுதப்போவதாகவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பான செய்திகள் :