மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதா, மாநிலங்களவையில் நிறைவேறியது

Home

shadow

சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவது, நவீன தொழில்நுட்ப பயன்பாடு உள்ளிட்ட கூடுதல் அம்சங்களைக் கொண்ட மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதா, மாநிலங்களவையில்  நிறைவேறியது.

மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் கடந்த 15-ஆம் தேதி மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த 23-ஆம் தேதி இந்த சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியதுஇந்த நிலையில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்த சட்டத் திருத்த மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். மசோதா மீதான விவாதத்தின்போது மாநில உரிமைகள் பறிக்கப்படுவது குறித்து நிதின் கட்கரி பதிலளித்தார். "அதிகாரிகளை நியமிப்பது தவிர, வாகனப் பதிவுக் கட்டணம் விதிப்பது மற்றும் அனுமதிக் கட்டணம் உட்பட மாநில உரிமைகள் எதையும் மத்திய அரசு கைப்பற்றவில்லை என்றும் மாநில அரசின் வருவாயில் ஒரு பைசாவைக் கூட மத்திய அரசு எடுத்துக்கொள்ளாது" என்றும் நிதின் கட்கரி தெளிவுபடுத்தினார். இதையடுத்து, விவாதத்துக்குப் பிறகு இந்த சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 108 பேரும், எதிராக 13 பேரும் வாக்களித்தனர். இந்த மசோதாவில், சாலை விதிகளை மீறுவோருக்கான அபராதத்தை அதிகரிப்பது, பழகுநர் உரிமத்தை இணையவழியில் பெறுவது, விபத்தில் சிக்கியோர் எளிய முறையில் காப்பீடு பெறுவது, விபத்தில் காயமடைந்தோரைக் காப்பவர்களுக்குச் சட்டப் பாதுகாப்பு அளிப்பது, ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஒரு மாதத்திலிருந்து ஓராண்டாக அதிகரிப்பது, மாற்றுத் திறனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு இரண்டரை லட்சம் ரூபாயும் அந்த விபத்தை ஏற்படுத்தியவர்கள் இழப்பீடு வழங்கும் வகையில் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பான செய்திகள் :