ரஃபேல் விவகாரம் - இந்திய அரசு தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு டசால்ட் நிறுவனம் மறுப்பு

Home

shadow

             ரஃபேல் போர் விமானம் கொள்முதல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தை இணைத்துக் கொள்ள இந்திய அரசு தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு டசால்ட் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.


ரஃபேல் போர் விமான தயாரிப்பு பணி தொடர்பாக பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனம் மற்றும் இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனம் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 


இந்த ஒப்பந்த விவகாரத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக மத்திய அரசு செயல்பட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வந்தது. 


இந்நிலையில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மீடியாபார்ட் எனும் பத்திர்க்கை வெளியிட்டுள்ள செய்தியில், ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டுமெனில் இந்திய பங்குதாரராக ரிலையன்ஸ் இருக்க வேண்டும் என மத்திய அரசு தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 


ரஃபேல் விவகாரத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்திய இந்த செய்திக்கு டசால்ட் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. 


இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்தியா - பிரான்ஸ் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி 36 ரஃபேல் போர் விமானங்களை வழங்கியுள்ளதாகவும், இந்திய ஆயுத தளவாட கொள்முதல் விதிமுறைகளுக்கு உட்பட்டே அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. 


மேலும், ரிலையன்ஸ் நிறுவனத்தை தாங்கள் எந்தவித நெருக்கடியும் இன்றி சுதந்திரமாகவே தேர்வு செய்ததாகவும், இந்தியாவை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களுடனும் தாங்கள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாகவும் டசால்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான செய்திகள் :