ராகுலுக்கு எதிராக சமூக ஆர்வலர் ஷெஜாத் பூனாவாலா குற்றச்சாட்டு

Home

shadow

             வங்கிக் கடன் மோசடியில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வைர வியாபாரி நீரவ் மோடியுடன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தொடர்பு இருப்பதாக சமூக ஆர்வலர் ஷெஜாத் பூனாவாலா குற்றம்சாட்டியுள்ளார்.


பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி பெற்ற மும்பை வைர வியாபாரி நீரவ் மோடி, அதனைத் திருப்பிச் செலுத்தாமல் தலைமறைவாகிவிட்டார். இதுதொடர்பாக சிபிஐயும் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருவதுடன், நீரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நீரவ் மோடியுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில்  பேசிக் கொண்டிருந்ததை தாம் பார்த்ததாக சமூக ஆர்வலர் ஷெஜாத் பூனாவாலா குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதியன்று, டெல்லி ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற விருந்தில் நீரவ் மோடியை ராகுல் காந்தி சந்தித்து பேசியதை மறுக்க முடியுமா? என சவால் விடுத்துள்ளார். 


இதே  காலகட்டத்தில்தான், நீரவ் மோடி, மெஹூல் சோக்ஸி ஆகியோருக்கு வங்கிக் கடன்கள் அளிக்கப்பட்டன. 


இந்நிலையில் குரான் மீது ஆணையிட்டு தாம் கூறுவது உண்மை என்று என்று குறிப்பிட்டுள்ள ஷெஜாத் பூனாவாலா, தான் தெரிவிப்பது உண்மை என்பதை நிரூபிக்க உண்மை கண்டறியும் சோதனைக்குத் தயார் என்றும் தெரிவித்துள்ளார். 


பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தும் இதே கருத்துகளை அவர் தெரிவித்தார். 


இருப்பினும், பூனாவாலாவின் குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. 


வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தாமால் லண்டனுக்குச் சென்று விட்ட தொழிலதிபர் விஜய் மல்லையாவுடன் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்குத் தொடர்பு இருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ள நிலையில், மற்றொரு வங்கி மோசடியாளர் நீரவ் மோடியுடன் அவருக்குத் தொடர்பிருப்பதாக சமூக ஆர்வலர் ஷெஜாத் பூனாவாலா குற்றம்சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான செய்திகள் :