ராகுல் டிராவிட் போல் ரிசர்வ் வங்கி பொறுமையுடன் சிந்தனை கொண்டு செயல்பட வேண்டும் - முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்

Home

shadow

         ராகுல் டிராவிட் போல் ரிசர்வ் வங்கி பொறுமையுடன் சிந்தனை கொண்டு செயல்பட வேண்டும் என அதன் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரிசர்வ் வங்கியின் செயல்பாகளில் மத்திய அரசு தலையிடுவதாக ரிசர்வ் வங்கி குற்றம் சாட்டியிருந்தது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரிசர்வ் வங்கி நிதானமாக யோசித்து செயல்பட வேண்டும் என அதன் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் சிந்தனையுடன் மத்திய அரசு செயல்படும் என்றும் ஆனால், அதேநேரம் நிதிச் சந்தையை ஸ்திரமாக வைக்கும் பொறுப்பு ரிசர்வ் வங்கிக்கு உள்ளது எனவும் தெரிவித்தார்.  மத்திய அரசின் கோரிக்கையை, கருத்தை ரிசர்வ் வங்கி ஏற்காமல் மறுக்க முடியும் எனவும் கூறினார். மத்திய அரசு தான் கார் டிரைவர் என்றால், ரிசர்வ் வங்கி தான் டிரைவரை பாதுகாக்கும் 'சீட் பெல்ட்' ஆகும் என தெரிவித்த அவர், சீட் பெல்ட் வேண்டுமா அல்லது வேண்டாமா என முடிவெடுக்க வேண்டியது மத்திய அரசு தான் எனவும் சீட்  பெல்ட் அணிந்து கொண்டு கார் ஓட்டினால், விபத்துகளில் இருந்து தப்பிக்கலாம் என்றும் தெரிவித்தார். மேலும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் பொறுமையாக நின்று விளையாடி, அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுப்பது போல, ரிசர்வ் வங்கி கொள்கைகளை மாற்றாமல் சிந்தையுடன் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :