வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்
ஏ.டி.எம்.களில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தடைபட்ட பரிவர்த்தனைகளை இலவச பரிவர்த்தனைகளாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
ஒரு வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளருக்கு அந்த வங்கி தங்கள் ஏ.டி.எம் மையங்களில் மாதந்தோறும் குறைந்தபட்சமாக 5 இலவச பரிவர்த்தனைகள் வழங்க வேண்டும். மற்ற வங்கிகளில் செய்யப்படும் ஏ.டி.எம் பரிவர்த்தனைகளிலும் குறைந்தபட்ச இலவச பரிவர்த்தனைகள் வழங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அதற்கு மேல் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டியுடன் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில், ஏ.டி.எம் இயந்திரங்களில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவும், ஏ.டி.எம்-களில் பணம் இல்லாததாலும் தடைபடும் வங்கி பரிவர்த்தனைகளை இலவச கணக்குகளில் சேர்க்கப்படுவதாகப் புகார் எழுந்தது. இதுபோன்ற காரணங்களால் தடைபடும் வங்கி பரிவர்த்தனைகளை இலவச ஏ.டி.எம் பரிவர்த்தனைகளாக கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுக்காத பரிவர்த்தனைகளான சேமிப்பு தொகை பரிசோதித்தல், பணம் அனுப்புதல் போன்ற சேவைகளை இலவச பரிவர்த்தனைகளாக கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.