வட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக்
கலைஞர் ஆஷிஷ் மற்றும் அவரது சகோதரர் அசுதோஷ் ஆகியோரை வீடுபுகுந்து அண்டை வீட்டினர்
துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர். வாக்குவாதத்தால்
ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்த இரட்டைக் கொலையை அண்டை வீட்டுக்காரர் மகிபால் சைனி மற்றும்
அவரது மகன்கள் செய்துள்ளனர் என, உத்திரப்பிரதேசம் மாநிலம், சாகரான்பூர் மூத்த காவல்துறை
கண்காணிப்பாளர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் கூறிய அந்த காவல்துறை
அதிகாரி, துப்பாக்கிச்சூட்டில் உயிருக்கு போராடிய பத்திரிக்கையாளர் மற்றும் அவரது சகோதரரை
அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது இறந்து விட்டதாகவும்,
இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை கைது செய்ய மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி
ஆதித்யநாத், இறந்த பத்திரிக்கையாளர் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும்
என அறிவித்துள்ளார்.