ஆந்திர மாநிலம்
ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து தேசிய புலனாய்வு அமைப்பின் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
கடந்த
2007-ம் ஆண்டு மே 18-ம் தேதி, ஹைதராபாத் நகரில் சார்மினாருக்கு அருகே உள்ள மெக்கா மசூதியில் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்த போது சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் 9 பேர்
உயிரிழந்ததுடன் 58 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய, என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள், ஹிந்து அமைப்பைச் சேர்ந்த சுவாமி அசீமானந்த் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். ஹைதராபாத் அருகே
நாம்பள்ளியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு
நீதிமன்றத்தில் பத்தாண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. உரிய ஆதாரங்கள் இல்லாததால் அசீமானந்த் உள்ளிட்ட அனைவரையும் வழக்கில் இருந்து விடுவித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தீர்ப்பின் நகல் கிடைத்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.