2ஜி வழக்கில் கனிமொழி, ராசா உள்ளிட்ட அனைவரும் விடுதலை: சி.பி.ஐ. நீதிபதி பரபரப்பு தீர்ப்பு

Home

shadow

இந்திய அரசியலையும் நாட்டையும் உலுக்கிய பல ஊழல் வழக்குகளில் 2ஜி ஊழல் வழக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

 

மத்தியில் காங்கிரசும், தமிழ்நாட்டில் தி.மு.க.வும் ஆட்சியை இழக்க இந்த ஊழல் காரணமாக அமைந்தது. இந்த ஊழல் குற்றச்சாட்டு விபரம் வருமாறு:-

 

மத்திய அரசின் தொலைத் தொடர்புத் துறை தனியார் நிறுவனங்களுக்கு 122 அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) உரிமம் வழங்குவதற்கான ஏலத்தை 2007-ம் ஆண்டு நடத்தியது. அப்போது பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தது. அந்த கூட்டணியில் முக்கிய அங்கம் வகித்த தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.ராசா மத்திய தொலைத் தொடர்புத்துறை மந்திரியாக இருந்தார்.

 

அவர் அலைக்கற்றை ஒதுக்கீட்டை புதிய விதிமுறைப்படி நடத்துவதற்கு பதில் முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் நடத்தினார். அதன்படி 13 தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு ஏலம் அடிப்படையில் அவர் 122 உரிமங்களையும் வழங்கினார். இதில்தான் ஊழல் நடந்து இருப்பதாக புகார்கள் எழுந்தன.

 

அதாவது மத்திய அரசிடம் ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற்ற தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள், அவற்றை மற்ற நிறுவனங்களுக்கு விற்பனை செய்து பல ஆயிரம் கோடி ரூபாயை சம்பாதித்தன. இது மத்திய அரசுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய வருவாய் இழப்பாகும். மத்திய கணக்கு தணிக்கைத் துறை இதை ஆய்வு செய்து 2ஜி வழக்கில் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறியது.

 

சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து இது தொடர்பாக விசாரணை நடத்தியது. ஆ.ராசா, கனிமொழி உள்பட 14 பேர் மற்றும் 3 நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. சி.பி.ஐ. தனது குற்றப்பத்திரிகையில் 2ஜி ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டால் மத்திய அரசுக்கு ரூ.30 ஆயிரத்து 984 கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறியது.

 

டெல்லியில் நீதிபதி ஓ.பி.ஷைனி தலைமையில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. இதையடுத்து 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆ.ராசாவும், 2011-ம் ஆண்டு ஏப்ரலில் கனிமொழியும் கைது செய்யப்பட்டு பிறகு ஜாமீனில் விடுதலை ஆனார்கள். கடந்த 6 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடந்தது.

 

154 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு 4 ஆயிரம் பக்கங்களில் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே மத்திய அமலாக்கத் துறையும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததாக ராசா, கனிமொழி, தயாளு அம்மாள் உள்பட 10 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளின் விசாரணை அனைத்தும் கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்தது.

 

இதைத் தொடர்ந்து நீதிபதி ஓ.பி.ஷைனி 2ஜி ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான தீர்ப்பை எழுதத் தொடங்கினார். சுமார் 2 மாதங்கள் அவர் தீர்ப்பை எழுதினார்.

 

எனவே ஜூலை மாதமே இந்த வழக்கில் தீர்ப்பு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீர்ப்பு எழுதுவதற்கு நீதிபதி ஓ.பி.ஷைனி மேலும் சிறிது கால அவகாசம் எடுத்துக் கொண்டதால் தீர்ப்பு அறிவிக்கப்படுவது ஒத்தி வைக்கப்பட்டு கொண்டே இருந்தது.

 

முதலில் ஆகஸ்டு 25-ந்தேதி தீர்ப்பு வெளியிடப்படும் என்று கூறப்பட்டது. பிறகு ஒத்திவைக்கப்பட்டு செப்டம்பர் 20-ந்தேதி தீர்ப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் நவம்பர் 7-ந்தேதி வெளியாகும் என்றனர். ஆனால் அதுவும் ஒத்திவைக்கப்பட்டது. டிசம்பர் மாதம் 21-ந்தேதி (இன்று) காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியிடப்படும் என்று சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி ஓ.பி.ஷைனி அறிவித்தார்.

 

2ஜி வழக்கு தீர்ப்பு எப்படி வருமோ என்ற பரபரப்பான சூழ்நிலையில் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில், தீர்ப்பை தெரிந்து கொள்வதற்காக பத்திரிகை - டி.வி. நிருபர்கள் நூற்றுக்கணக்கில் குவிந்திருந்தனர். அதுபோல தி.மு.க. மூத்த தலைவர்கள் துரைமுருகன், பொன்முடி, டி.ஆர்.பாலு, திருச்சி சிவா உள்பட தி.மு.க.வினரும் நூற்றுக்கணக்கில் குவிந்திருந்தனர். ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட 14 பேரும் 10 மணிக்கு முன்னதாகவே சி.பி.ஐ. கோர்ட்டுக்கு வந்துவிட்டனர்.

 

வழக்கை தொடுத்த சுப்பிரமணியசாமியும் கோர்ட்டுக்கு வந்திருந்தார்.

 

சரியாக 10.30 மணிக்கு ஓ.பி.ஷைனி இருக்கையில் வந்து அமர்ந்தார். அவர் முன்பு 14 பேரும் ஆஜரானார்கள். இதையடுத்து ஓ.பி.ஷைனி தீர்ப்பை அறிவித்தார்.

 

10.45 மணிக்கு நீதிபதி ஷைனியின் தீர்ப்பு வெளியானது. 2ஜி ஊழல் வழக்கில் இருந்து முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி. உள்பட குற்றம்சாட்டப்பட்ட 14 பேரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.

 

2ஜி வழக்கில் 14 பேர் தவிர ஸ்வான் டெலிகாம், யுனிடெக், டாடா டெலிசர்வீஸஸ் ஆகிய 3 தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது. ஆனால் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று அந்த நிறுவனங்களும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாக நீதிபதி ஷைனி அறிவித்தார்.

 

நீதிபதி ஷைனி தனது தீர்ப்பில், “குற்றச்சாட்டுகளில் வலுவான ஆதாரங்கள் இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் மீது கூட சி.பி.ஐ.யால் குற்றத்தை உறுதிபடுத்த இயலவில்லை. குற்றச்சாட்டுகளை சரியான முறையில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தவறி விட்டன” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

இதையடுத்து 2ஜி வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட அனைவரும் ரூ.5 லட்சத்தை பிணைத் தொகையாக செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

 

தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய அவர் அனுமதித்துள்ளார். அவ்வாறு மேல் முறையீடு செய்யப்படும் பட்சத்தில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் கோர்ட்டில் மீண்டும் ஆஜராவதை உறுதிப்படுத்தவே ரூ.5 லட்சம் பிணைத்தொகை செலுத்த உத்தரவிட்டு இருப்பதாக அவர் கூறினார்.

 

இந்த தீர்ப்பை அறிந்ததும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற வளாகத்தில் திரண்டு இருந்த தி.மு.க. தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் உற்சாக வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

 

ராசா விடுதலை, கனிமொழி விடுதலை என்று கோர்ட்டு வளாகத்தில் இருந்து தி.மு.க.வினர் கோ‌ஷமிட்டப்படி வெளியே வந்தனர். இதையடுத்து அந்த பகுதியில் உள்ள சாலையில் தி.மு.க.வினர் பட்டாசுகளை வெடித்தனர். இனிப்புகளும் வழங்கப்பட்டன.

 

இதற்கிடையே தீர்ப்பு வாசிக்கப்பட்டு முடித்ததும் ஆ.ராசா, கனிமொழி இருவரும் வெளியில் வந்தனர். அவர்கள் மீது பூக்களை வாரி இறைத்து தி.மு.க. தொண்டர்கள் உற்சாக கோ‌ஷமிட்டு வரவேற்றனர்.

 

தொண்டர்கள் வெள்ளத்தில் மிதந்து வெளியில் வந்த ராசாவும், கனிமொழியும் அனைவருக்கும் கை கூப்பி வணக்கம் தெரிவித்தனர். பிறகு கூட்டத்தினரை பார்த்து கை அசைத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

 

இந்த வழக்கு விசாரணை விவகாரங்களில் ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி என்று ராசாவும், கனிமொழியும் கூறினார்கள். அவர்கள் இருவருக்கும் தி.மு.க. நிர்வாகிகள் கை குலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இது தொடர்பான செய்திகள் :