2005-வது ஆண்டில் கொண்டு வரப்பட்ட ஆர்டிஐ சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்

Home

shadow

மத்திய தகவல் ஆணையரின் பதவிக்காலம், ஊதியம் ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வருவதற்கான சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இம்மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதத்தின் போது, மசோதாவை தேர்வுக்குழு பரிந்துரைக்கு அனுப்ப வேண்டும் என கூறி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

திரிணமூல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன், ஆர்டிஐ சட்டத்திருத்த மசோதாவை தேர்வுக்குழுக்கு அனுப்ப வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தார். இந்த மசோதாவை தேர்வுக்குழுக்கு அனுப்பாமல் விவாதத்துக்கு எடுக்க முடியாது என்று தனது நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சி தெளிவுபடுத்தியது. 

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு நடுவே, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பேசுகையில், "RTI சட்டத்தை வலுவிழக்கச் செய்வதற்கான எந்தவித உள்நோக்கமும் அரசுக்கு கிடையாது என்றும், இந்த மசோதாவை தேர்வுக் குழுக்கு அனுப்புவதற்கான அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார். அதிமுக எம்பி நவநீத கிருஷ்ணனும் RTI சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தார். 

தொடர்ந்து எதிர்ப்புகளைப் பதிவு செய்த எதிர்க்கட்சிகள், குலாம் நபி ஆசாத் தலைமையில் மாநிலங்களவை நிகழ்வுகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்தது. இதையடுத்து, மசோதாவை தேர்வுக்குழுக்கு அனுப்ப வேண்டும் என்ற தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த தீர்மானத்துக்கு எதிராக 117 உறுப்பினர்களும், ஆதரவாக 75 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதைத்தொடர்ந்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. தகவல் ஆணையரின் ஊதியம், பதவிக்காலம், நியமனம் ஆகியவை குறித்து மத்திய அரசு முடிவு செய்ய இந்த மசோதா வழிவகை செய்கிறது. 

இது தொடர்பான செய்திகள் :